

தமிழகத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் (ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள்) பழைய ஓய்வூ தியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.4-ம் தேதி முதல் காலவரை யற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்தனர். இதற்கு தடை விதிக் கக் கோரி மதுரை வழக்கறிஞர் லோக நாதன் உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு கடந்த டிச.3-ல் விசார ணைக்கு வந்தபோது, ஜாக்டோ-ஜியோ கோரிக்கை தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப் பித்த உத்தரவுகளின் அடிப்படை யில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அறிக்கை அளிக்க அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்ட னர். இதையடுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக ஜாக்டோ-ஜியோ சார்பில் நீதிமன் றத்தில் உறுதியளிக்கப்பட்டது.
இவ்வழக்கு ஜன.11-ல் விசார ணைக்கு வந்தபோது, அரசுத் தரப் பில் முடிவெடுக்க அவகாசம் கோரப்பட்டதற்கு ஜாக்டோ-ஜியோ ஆட்சேபம் தெரிவித்தது. பின்னர் வேலைநிறுத்தத்தை நிறுத்தி வைப் பதாக நீதிமன்றத்துக்கு அளித்த உறுதி மொழியை ஜாக்டோ-ஜியோ திரும்பப் பெற்றுக் கொண்டது. இதையடுத்து ஜன.22 முதல் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்தம் தொடங்கினர்.
இந்நிலையில், இவ்வழக்கு நீதி பதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அரசு வழக்கறி ஞர் அரவிந்த் பாண்டியன் வாதிடும் போது, "ஜாக்டோ-ஜியோ போராட் டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும். தேர்வு நெருங் கும் நேரத்தில் ஆசிரியர்கள் போராட் டத்தில் ஈடுபடுவதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்" என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி கள், மாணவர்களின் பாதிப்பை சமா ளிக்க என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது? என கேள்வி எழுப்பி னர். ஆசிரியர்கள் போராட்டத்தை சமாளிக்க தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என அரவிந்த் பாண்டி யன் தெரிவித்தார். இதற்கு, "தற்கா லிக ஆசிரியர்கள் பின்னர் தங்களை பணி நிரந்தரம் செய்யுமாறு போராடு வார்கள். அடுத்து வழக்குப் போடு வார்கள். இதனால் வழக்குகள்தான் பெருகும்" என நீதிபதிகள் கூறினர்.
பின்னர் நீதிபதிகள், கூடுதல் அரசு வழக்கறிஞரை அழைத்துப் போராட் டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக தலைமைச் செயலரிடம் சில தகவல்களை கேட்டு உடன டியாகத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர். நீதிமன்றம் மீண்டும் கூடியபோது தலைமைச் செயலரி டம் பெறப்பட்ட தகவலை நீதிபதி களிடம் கூடுதல் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். அதில் அரசால் ஒன் றும் செய்ய முடியாது எனத் தெரிவிக் கப்பட்டது. "அரசு பிடிவாதமாக உள்ளது. அடுத்து நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?" என ஜாக்டோ-ஜியோ வழக்கறிஞர் பிரசாத்திடம் நீதிபதிகள் கேட்டனர்.
இதற்கு, ‘‘பிற மாநிலங்களில் வழங்கப்பட்டுள்ளதுபோல், 21 மாத சம்பள நிலுவையை வழங்க உத்தர விட வேண்டும் என பிரசாத் கேட்டுக் கொண்டார். அதையேற்க மறுத்த நீதிபதிகள், இந்த மனு ஜாக்டோ-ஜியோ சார்பில் தாக்கல் செய்யப் பட்டது அல்ல. வேறு நபர் தாக்கல் செய்த மனுவில், நீங்கள் கேட்பது போல் உத்தரவு பிறப்பிக்க முடி யாது என்றனர். பின்னர், இந்த வழக் கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடி யாது என்று கூறி விசாரணையை பிப். 18-க்கு ஒத்திவைத்தனர்.
நீதிபதி சரமாரி கேள்வி
ஏற்கெனவே நடத்த போராட்டத்தின்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தி.மலை மாவட்ட பள்ளி ஆசிரியர் ஒருவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி என்.கிருபாகரன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ஆசிரியர் சங்கங்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடம், நீதிபதி, ‘‘மாணவர்களின் கல்வி நலனில் ஆசிரியர்களுக்கு துளிகூட அக்கறை இல்லையா? பெரும்பாலான அரசுப் பள்ளி ஆசிரியர் களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில்தான் படிக்கின்றனர். போராட்டத்தை கைவிடும் வரை அரசுப் பள்ளி ஆசிரியர் களின் குழந்தைகளுக்கும் கற்பிப்பதை நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டால் அதை உங்களால் ஜீரணிக்க முடியுமா? ஆசிரியர் களின் மகத்தான பணி கற்பித்தல். போராடக் கூடாது எனக்கூற வில்லை. போராட்டத்துக்கு இது உகந்த தருணமா என்பதுதான் என் னுடைய கேள்வி" என சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.
பின்னர் நீதிபதி, ‘தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர் கள் இந்த கல்வியாண்டு முடியும்வரை இந்தப் போராட்டத்தை தள்ளிவைக்க முடியுமா என்பதை நாளை மதியத்துக்குள் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் தெரிவிக்க வேண்டும். அரசு தரப்பிலும் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர எடுத்துள்ள நடவடிக் கைகள் குறித்தும் விளக்கமளிக்க வேண்டும். ஏற்கெனவே இதுதொடர் பாக 2 வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தற்போது மாணவர்களின் நலன் கருதி இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன' என தெரிவித்தார்.