Last Updated : 18 Jan, 2019 08:21 AM

 

Published : 18 Jan 2019 08:21 AM
Last Updated : 18 Jan 2019 08:21 AM

அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கில கற்றல் திறனை மேம்படுத்த புதிய கல்வி முறையை நடைமுறைபடுத்த திட்டம்: விரைவில் முழு வீச்சில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்

அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலக் கல்வியை சிறப்பாக கற்றுக் கொள்ள 55 வகையான புதிய செயல் திட்ட கல்வி முறையை பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்த உள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின்கீழ் 38,000-க்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் 70 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கல்விக்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.28 ஆயிரம் கோடி நிதியை அரசு ஒதுக்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனினும், பெரும்பாலான அரசுப் பள்ளி மாணவர்களின் ஆங்கில அறிவு குறைவாகவே உள்ளது.

குறிப்பாக இடைநிற்றலைத் தவிர்க்க ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் கட்டாயத் தேர்ச்சி செய்யப்படுகின்றனர். இதனால் 9-ம் வகுப்புக்கு வரும் 62 சதவீத மாணவர்களுக்கு ஆங்கில மொழி பற்றி புரிதல் பெரிய அளவில் இல்லை. அதிலும் மெல்ல கற்கும் மாணவர்களின் நிலை இன்னும் மோசமாக இருக்கிறது.

இதனால் அவர்கள் 10-ம் வகுப்புக்கு தேர்ச்சி பெறுவதிலும் தடை ஏற்படுகிறது. இதை மாற்ற 9-ம் வகுப்பில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் ஆங்கில கற்றல் திறனை மேம்படுத்த குறைதீர் கற்பித்தல் என்ற புதிய கல்வி முறையை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் மூலம் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, “அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பலர் ஆங்கிலப் பாடம் கற்பதற்கு சிரமப்படுகின்றனர். மாணவர்களின் நலன் கருதி ஆங்கிலம் கற்பித்தலை எளிமையாக்கும் விதமாக 55 வகையான புதிய செயல் முறைகள் புத்தகமாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகத்தில் ஆரம்பப்பள்ளியில் இருந்து ஆங்கிலம் கற்பதற்கான வழிமுறைகள் எளிமையாக செயல்விளக்க படங்களுடன் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் மாணவர்களுக்கு கற்பிப்பது குறித்து தேர்வு செய்யப்பட்ட 1,200 ஆசிரியர்களுக்கு மாநில அளவில் பயிற்சி தரப்பட்டு வருகிறது. இவர்களைக் கொண்டு கல்வி மாவட்ட வாரியாக முகாம்கள் நடத்தி மற்ற ஆங்கில வகுப்புகளை எடுப்பது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

ஏற்கெனவே 9-ம் வகுப்பு மாணவர்களின் கற்கும் திறன் அறிய கடந்த ஜனவரி 4-ம் தேதி முன்னறித் தேர்வு நடத்தப்பட்டது. அதில் 0-20 மற்றும் 20-40 மதிப்பெண் வரை எடுத்தவர்கள் விவரங்கள் கணக்கிடப்பட்டுள்ளன.

முதல்கட்டமாக அந்த மாணவர்களுக்கு வாரத்துக்கு 4 பயிற்சி வகுப்புகள் கூடுதலாக நடத்தப்பட உள்ளன. அதன்பின் அவர்களின் கற்றல் மேம்பாட்டின் அடிப்படையில் பயிற்சிகள் வழங்கப்படும். எனினும், திட்டம் எதிர்பார்த்ததைவிட தாமதமாகத் தொடங்கப்பட்டதால் அடுத்த ஆண்டு முதல் எல்லா பள்ளிகளிலும் முழு வீச்சில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x