

திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்வதற்கு முன்பாக தலைமை தேர்தல் ஆணையம், மத்திய அரசிடம் ஆலோசித்ததா என, தலைமை தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் மதிப்பனூரைச் சேர்ந்த தாமோதரன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:
"முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவால் காலியான திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜனவரி 28-ல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதனிடையே 'கஜா' புயல் நிவாரண பணிகள் முடிவடையாத நிலையில் இப்போதைக்கு இடைத்தேர்தல் தேவையில்லை என அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.
இதையடுத்து திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இவ்வாறு அறிவிக்கப்பட்ட தேர்தலை ரத்து செய்ய தலைமை தேர்தல் ஆணையருக்கு அதிகாரம் இல்லை. அவ்வாறு ரத்து செய்வதற்கு முன்பாக மத்திய அரசுடன் ஆலோசித்து ஒப்புதல் பெற வேண்டும். தமிழக தலைமை செயலர் கடிதம் மூலம் கேட்டு கொண்டார் என்பதற்காக ரத்து செய்ய முடியாது. இது சட்டவிரோதம்.
எனவே, இடைத்தேர்தலை ரத்து செய்த அறிவிப்புக்கு தடை விதித்து, அந்த அறிவிப்பு செல்லாது என அறிவித்து உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இடைத்தேர்தலை தள்ளி வைக்குமாறு தலைமை செயலர் கடிதம் அனுப்பியதோடு, எதிர்கட்சிகளும் தற்போதைக்கு இடைத்தேர்தல் வேண்டாம் என கேட்டுக்கொண்டன. அந்த அடிப்படையில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
அதனை ஏற்க மறுத்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், சட்டப்படி அறிவிக்கப்பட்ட தேர்தலை ரத்து செய்வதற்கு முன்பாக தேர்தல் ஆணையம் மத்திய அரசோடு ஆலோசித்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்வதற்கு முன்பாக மத்திய அரசிடம் ஆலோசித்ததா என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, இது குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை வரும் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.