

தமிழகத்தில் அதிக வாக்காளர், குறைந்த வாக்காளர், இளம் வாக்காளர்கள் உள்ள தொகுதிகள் குறித்த விவரம் இன்று இறுதி வாக்காளர் பட்டியலின்போது வெளியிடப்பட்டது.
2019-ம் ஆண்டு இறுதி வாக்காளர் பட்டியல் இன்று தலைமைச் செயலகத்தில் மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு வெளியிட்டார்.
அதில் வாக்காளர்கள் மொத்த எண்ணிக்கை, வயது வாரியாக, இனம் வாரியாக, மாவட்ட வாரியாக, தொகுதிகளின் தனிச்சிறப்புகளும் வெளியானது. அதன்படி அதிக வாக்காளர்கள், குறைந்த வாக்காளர்கள், இளம் வாக்காளர்கள் கொண்ட தொகுதிகள் குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி:
தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர் கொண்ட தொகுதி காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சோழிங்கநல்லூர் தொகுதி ஆகும். இத்தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 6 லட்சத்து 18 ஆயிரத்து 695 பேர் உள்ளனர்.
இதில் ஆண் வாக்காளர்கள் 3 லட்சத்து 11 ஆயிரத்து 102 பேரும், பெண் வாக்காளர்கள் 3 லட்சத்து 7 ஆயிரத்து 518 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 75 பேரும் உள்ளனர்.
தமிழகத்தில் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதி:
தமிழ்நாட்டிலேயே குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதி சென்னை மாவட்டத்திலுள்ள துறைமுகம் தொகுதியாகும். இதன் மொத்த வாக்காளர்கள் 1 லட்சத்து, 66 ஆயிரத்து, 515 பேர் ஆவர். இதில் ஆண் வாக்காளர்கள் 87 ஆயிரத்து 39 பேர். பெண் வாக்காளர்கள் 79 ஆயிரத்து 427 பேர். மூன்றாம் பாலினத்தவர் 49 பேர்.
தமிழகத்தில் அதிக இளம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதி:
தமிழகத்தில் அதிக இளம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் தொகுதி உள்ளது. இங்கு 7696 இளம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 4189 பேரும், பெண் வாக்காளர்கள் 3507 பேரும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் யாரும் இல்லை.