Published : 10 Sep 2014 12:39 PM
Last Updated : 10 Sep 2014 12:39 PM

பொருளாதார வளர்ச்சியில் கடைசி இடம் வகிப்பது தமிழகத்துக்கு அவமானம்: ராமதாஸ்

2012-13 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியில், 3.39% வளர்ச்சியுடன் தமிழகம் முடங்கிவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: "இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் 2012-13 ஆம் ஆண்டில் எட்டிய பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்களை மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

அதில் தமிழகப் பொருளாதார வளர்ச்சி குறித்த தகவல்கள் மிகவும் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. பின்தங்கிய மாநிலமாக கருதப்படும் பிகார் 10.73% வளர்ச்சியுடன் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ள நிலையில், தமிழ்நாடு வெறும் 3.39% பொருளாதார வளர்ச்சியுடன் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்தித் தரப்போவதாகக் கூறித் தான் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார்.

அதன்பின் 2012-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொலைநோக்குத் திட்டம்-2023 ஆவணத்தை வெளியிட்டு பேசிய ஜெயலலிதா, தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்குவதே தமது லட்சியம் என்றும், அதற்காகவே திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஜெயலலிதா வகுத்து செயல்படுத்திய திட்டங்கள் தமிழகத்தை எந்த அளவுக்கு முன்னேற்றியுள்ளன என்பதற்கு பொருளாதார வளர்ச்சி குறித்த இந்த விவரங்கள் தான் சாட்சியாகும்.

வறுமைக்கும் பின்தங்கிய தன்மைக்கும் உதாரணமாக காட்டப்படும் பிகார் பொருளாதார வளர்ச்சியில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாகவே பிகார் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிவருகிறது. அண்டை மாநிலமான கேரளம் 8.24% வளர்ச்சியுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

ஆனால், இந்தியாவின் முன்னணி மாநிலம் என்று தமிழக ஆட்சியாளர்களால் பெருமை பேசப்படும் தமிழகம் கடைசி இடத்தில் உள்ளது. தேசிய சராசரி பொருளாதார வளர்ச்சி 4.5% ஆக உள்ள நிலையில் அதைக்கூட எட்ட முடியாமல் 3.39% வளர்ச்சியுடன் தமிழகம் முடங்கி விட்டது. தேசிய சராசரிக்கும் குறைவான வளர்ச்சியை எட்டிய இரு மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்பது அவமானத்திற்குரிய விஷயமாகும்.

ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் மட்டுமின்றி, வேளாண் துறையில் மைனஸ் 12.9% வளர்ச்சி, தொழில் உற்பத்தித் துறையில் மைனஸ் 1.3% வளர்ச்சி என தமிழகம் அதல பாதாளத்தை நோக்கிச் செல்கிறது.

ஒரு மாநிலம் பொருளாதார வளர்ச்சியில் சிறந்து விளங்க வேண்டுமானால், அங்கு முதலீட்டை ஈர்ப்பதற்குரிய சூழல், தொழில் தொடங்குவதற்கு எளிதில் அனுமதி கிடைக்கும் நிலைமை, தடையற்ற மின்சார வசதி, சிறப்பான சட்டம் - ஒழுங்கு ஆகியவை இருக்க வேண்டியது அவசியமாகும்.

ஆனால் இவை எதுவுமே தமிழகத்தில் இல்லை என்பது தான் வேதனையளிக்கும் உண்மையாகும். தமிழகத்தில் தொழில்தொடங்க எவரேனும் முன்வந்தால் கூட அவர்களால் முதலமைச்சரை சந்தித்து பேசி அனுமதி பெற்றுவிட முடியாது; ஆட்சியாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட இடைத்தரகர்களை சந்தித்து அவர்கள் பட்டியலிடும் தேவைகளை நிறைவேற்றினால் மட்டுமே தொழில் தொடங்குவதற்கு அனுமதி பெற முடியும்.

ஆனால், தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா மருந்தகம், அம்மா திரையரங்கம் வரிசையில், வேறு எந்த வெற்றுத் திட்டத்தைத் தொடங்கலாம் என்பது குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பொருளாதார வளர்ச்சியில் முதலிடம் பிடிக்கும் நோக்குடன் மற்ற மாநிலங்கள் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்க தமிழகமோ ஆண்டுக்கு ரூ.40,000 கோடிக்கு மது விற்பனை, ரூ.1.78 லட்சம் கோடி கடன்சுமை, சுமார் 95 லட்சம் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என துயரம் மிகுந்த திசையில் முதலிடத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், ஜெயலலிதாவோ இதையெல்லாம் மறைத்து விட்டு மதுவையும், இலவசங்களையும் கொடுத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.

2 ஆண்டுகளுக்கு முன் தொலைநோக்குத் திட்டத்தை வெளியிட்டு பேசிய ஜெயலலிதா, "சிறந்த தலைவர்கள் ஒரு தொலைநோக்கு திட்டத்தை உருவாக்குகிறார்கள். அதை தெளிவுபடுத்துகின்றனர். கனவை நிறைவேற்ற பாடுபடுகிறார்கள்" என கூறினார்.

சிறந்த தலைவர்களுக்குரிய இலக்கணங்களாக ஜெயலலிதா குறிப்பிட்டவை அனைத்தும் உண்மை தான். ஆனால், நல்ல நிலையில் இருந்த தமிழகப் பொருளாதாரத்தை கடைசி நிலைக்கு கொண்டு சென்ற முதலமைச்சர் ஜெயலலிதா எப்படிப்பட்ட தலைவர்? என்பதை இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டு மக்கள் தீர்மானிப்பார்கள் என்பது உறுதி" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x