Published : 31 Jan 2019 11:26 AM
Last Updated : 31 Jan 2019 11:26 AM

காவல்துறை சார்பில் சேலத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் ‘ரோபோ’- திருட்டு வாகனங்களை கண்டறியவும் வாய்ப்பு

சேலம் மாநகர காவல் துறை சார்பில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சென்னையை தொடர்ந்து சேலத்தில் ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திருட்டு வாகனங்களை கண்டறியும் வசதியும் உள்ளது.

மாநகர சாலைகளில் போக்கு வரத்தினை ஒழுங்குபடுத்துவது மிகவும் சவாலான பணியாக காவல் துறையினருக்கு இருந்து வருகிறது. வெயில், மழை உள்ளிட்ட அனைத்து கால நிலைகளிலும் தங்கள் உடல் நலனைப் பொருட்படுத்தாமல் போலீஸார் சாலைகளில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்து வதால், மக்கள் சாலைகளில் சிக்கலின்றி பயணிக்க முடிகிறது.

சென்னையை அடுத்து...

இந்நிலையில், போக்குவரத்து போலீஸாருக்கு உதவிடும் வகையில் மகாராஷ்டிரா மாநிலம் புனே மற்றும் தமிழகத்தின் சென்னை ஆகிய நகரங்களில் போக்கு வரத்தினை ஒழுங்குபடுத் தும் ரோபோ அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. தற்போது, பெருநகரங் களின் வரிசையில் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர், சேலம் மாநகரிலும் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்துவதற்கான ரோபோவை சோதனை அடிப்படை யில் அறிமுகம் செய்துள்ளார்.

ரோபோ அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சேலம் அஸ்தம்பட்டி சாலை சந்திப்பில் நேற்று காலை நடைபெற்றது. மாநகர துணை கமிஷனர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) சியாமளா தேவி தலைமை வகித்து ரோபோ பணி யின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார்.

ப்ளூடூத் மூலம் இயக்கம்

நகரும் சக்கரங்களுடன் கூடிய ரோபோ, ‘ப்ளூடூத்’ செயலி மூலம் இயக்கப்படுகிறது. ரோபோ போலீஸாரைபோல சாலை நடுவில் நின்றபடி வாகனங்களை கட்டுப்படுத்தி போக்குவரத்தினை ஒழுங்குபடுத்துகிறது. அதன் மார்பில் உள்ள திரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

ரோபோ பயன்பாடு குறித்து போலீஸ் துணை கமிஷனர் (குற்றம் மற்றும் போக்கு வரத்து) சியாமளா தேவி கூறும் போது, “போக்குவரத்தினை ஒழுங்கு படுத்தும் ரோபோ சோதனை அடிப்படையில் பயன்படுத்தப் படுகிறது. இது அனைத்து பள்ளிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு மாணவர்களுக்கு, சாலை பாதுகாப்பு குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தப்படும். ரோபோவை ‘வாகன்’ செயலியுடன் இணைத்து, வாகன தணிக்கை மேற் கொள்ளும்போது, திருட்டு வாகனங் களை எளிதில் அடையாளம் கண்டுபிடிக்க உதவியாக இருக்கும். மழை, வெயில் காலங்கள், ஆட்கள் பற்றாக்குறை நேரங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

வியப்பில் மக்கள்

இந்நிகழ்ச்சியில், காவல் உதவி ஆணையாளர்கள் இளங்கோவன் (போக்குவரத்து), கணேசன், தினகரன், குணசேகரன், சுந்தரமூர்த்தி, இன்ஸ்பெக்டர் கற்பகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். சாலை போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய ரோபோவின் செயல்பாட்டை பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர். வாகன ஓட்டிகள் பலர் ரோபோ பணியை செல்போனில் படம் எடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x