அதிகாரிகள் மீது பாயும் சட்ட அமைச்சருக்கு இதையெல்லாம் கவனிக்க நேரமில்லையா?- ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பில் தினகரன் கேள்வி

அதிகாரிகள் மீது பாயும் சட்ட அமைச்சருக்கு இதையெல்லாம் கவனிக்க நேரமில்லையா?- ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பில் தினகரன் கேள்வி
Updated on
1 min read

ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்கிற எண்ணம் ஆரம்பத்திலிருந்தே எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இருக்கவில்லை. அதனால்தான் உச்ச நீதிமன்றத்தில் இத்தகைய தீர்ப்பைப் பெற்றுள்ளோம் என டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து டிடிவி தினகரன் இன்று வெளியிட்ட அறிக்கை:

''ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு மிகப்பெரிய அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. பலவீனமான நடைமுறை கொண்டு ஸ்டெர்லைட்டை மூடியதாலும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பழனிசாமி அரசு உரிய ஆதாரங்களை முன்வைக்கத் தவறிய காரணத்தினாலும், உணர்வுப்பூர்வமாக செயல்படாமலும், சட்ட ரீதியாக வலுவாக வாதிடாத காரணத்தினாலும் தான் ஸ்டெர்லைட் நிர்வாகம் சொன்னபடி தனது ஆலையைத் திறந்துவிட்டது.

நிலத்தை, காற்றை, நீரை நஞ்சாக்கும் ஸ்டெர்லைட் ஆலையே வேண்டாம் என்று மக்கள் போராடினார்கள். தனது கொடூர அடக்குமுறையைப் பயன்படுத்தி 13 அப்பாவிகளை பலியாக்கி அப்போராட்டத்தை அடக்கிய தமிழக அரசின் செயல், ஆறாத வடுவாகிவிட்டது. அதன்பிறகும் இவ்வழக்கை பழனிசாமி அரசு மிக அலட்சியமாகக் கையாண்டதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

 உச்ச நீதிமன்றத்தில் தமிழக நலன் சார்ந்த பிரச்சினைகளில் தொடர் தோல்விகளைத்தான் நாம் சந்தித்து வருகிறோம். முல்லைப் பெரியாறு, மேகேதாட்டு, நீட் என்று தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சினைகளில் பழனிசாமி அரசு பெரும் தோல்வியையே தமிழகத்திற்கு பெற்றுத் தந்து வருகிறது. அதிகாரிகள் மீது அர்த்தமில்லாமலும், நிதானமில்லாமலும் பாயும் சட்ட அமைச்சருக்கு இதையெல்லாம் கவனிக்க நேரமில்லையா? இவற்றையெல்லாம் கண்காணிக்காமல் பழனிசாமிக்கு வேறென்ன வேலை?

ஆதாய அரசியலில் மட்டும் வெல்லும் இவர்கள், மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் தொடர்ந்து தோற்பது ஏன்? குறிப்பாக, ஸ்டெர்லைட் விஷயத்தில் தொடக்கத்திலிருந்தே இந்த ஆலையை மூடவேண்டும் என்ற எண்ணம் பழனிசாமி அரசுக்கு இருந்ததே இல்லை. அதனால்தான் தாமிர உருக்காலைகளே தமிழகத்திற்கு வேண்டாம் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதை செவிமடுக்க மறுத்தது.

இனிமேலாவது தாமதிக்காமல் ஒரு கொள்கை முடிவை எடுத்து, அவசியப்பட்டால் அவசரச் சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்''.

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in