Published : 01 Jan 2019 08:33 AM
Last Updated : 01 Jan 2019 08:33 AM
தமிழகத்தில் மட்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அரசால் விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வருவதால், பாக்கு மட்டைத் தட்டுகளுக்கு திடீரென மவுசு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, பாக்கு மட்டைத் தட்டுகளின் விலை 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் மட்காத பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு, இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது. இந்த தடையால் பிளாஸ்டிக் தாள், தட்டுகள், தேநீர் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில், குவளைகள், தண்ணீர் உறிஞ்சி குழல், பிளாஸ்டிக் கொடி, பிளாஸ்டிக் உறைகளை பயன்படுத்த முடியாது. பால், தயிர், எண்ணெய், மருத்துவ உறைகளுக்கு மட்டும் தடையில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பயன்பாட்டில் இருந்தபோது பாக்கு மட்டைத் தட்டுகளின் பயன்பாடு கோயில்களிலும், பெரிய விழாக்களில் மட்டுமே இருந்தது. தேவையான எண்ணிக்கையில்பாக்கு மட்டை தட்டுகள் கிடைத்தபோதும், விலை குறைவாக இருந்ததால், பிளாஸ்டிக் தட்டுகளை மட்டுமே மக்கள் பயன்படுத்தினர்.
இப்போது பிளாஸ்டிக் தடைக்கு பிறகு பாக்கு மட்டை தட்டுகளின் மவுசு அதிகரித்துள்ளது. பாக்கு மட்டை தட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது.
சந்தையில் 2 அங்குலம் முதல் 12 அங்குலம் அளவில் வட்டம், சதுர வடிவிலான பாக்கு மட்டை தட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இப்போது பாக்கு மட்டைகளில் செய்யப்பட்ட ஸ்பூன், 200 எம்எல் சூப், டீ கப்புகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. தட்டுகளை பொறுத்தவரை உற்பத்தி செய்யும் இடத்தில் ஒரு தட்டு அங்குலம் வாரியாக ரூ.1 முதல் ரூ.3.50 வரையும், மொத்த கடைகளில் ரூ.2 முதல் ரூ.6 வரையும், சிறு கடைகளில் ரூ.2 வரை லாபம் வைத்தும் விற்கப்படுகிறது.
பிளாஸ்டிக் தடை காரணமாக பாக்கு மட்டை தட்டுகளின் விற்பனை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. உற்பத்தி இடத்தில் ரூ.4-க்கு வாங்கும் 12 அங்குல தட்டு வெளி மார்க்கெட்டில் ரூ.8-க்கு விற்கப்படுகிறது. இந்த விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மதுரை திருமோகூர் பெருங்குடியில் பாக்குமட்டை தட்டு உற்பத்தி மற்றும் பாக்குமட்டை இயந்திர விற்பனை நிறுவன உரிமையாளர் கே.ஜெகதீஸ்வரன் கூறியதாவது:
தமிழகத்தில் சேலம், ஆத்தூர், வாழப்பாடியில் பாக்கு மட்டைகள் கிடைக்கின்றன. இந்த மட்டைகள் சிறியளவில் இருப்பதால் தட்டுகள் செய்ய முடியவில்லை. கர்நாடக மாநிலம் சிமோகாவில் கிடைக்கும் பாக்கு மட்டைகள் பெரியளவில் உள்ளன. இதனால் இந்த மட்டைகளில் பல அளவுகளில் பல வடிவங்களில் தட்டுகள் செய்கிறோம். இந்த தட்டுகள் எளிதில் மட்கிவிடும். மட்கினால் கால்நடைகளுக்கு உணவாகும்.
பிளாஸ்டிக் தடையால் அனைவரும் பாக்கு மட்டை தட்டுகளுக்கு மாறி வருகின்றனர். இப்போது அதிகளவு ஆர்டர் வருகின்றன. அதேபோல் பாக்கு மட்டை தட்டு தயாரிக்கும் இயந்திரங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!