Published : 30 Jan 2019 09:53 AM
Last Updated : 30 Jan 2019 09:53 AM

வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அரசும், ஆசிரியர்களும் முன்வர வேண்டும்: பெற்றோர், மாணவர்கள் வலியுறுத்தல்

வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசும், ஆசிரியர்களும் முன்வர வேண்டும் என்று பெற்றோரும் மாணவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெற்றோர் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:

இரா.இளங்கோ (சென்னை): அரசுப் பள்ளிகளை மூடக்கூடாது என்பதே ஆசிரியர்களின் பிரதான கோரிக்கை. மேலும் தங்களின் சம்பளத்தில் பிடிக்கப்படும் ஒய்வூதிய தொகையின் நிலை குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த போராட்டம் முழுவதும் ஊதிய உயர்வுக்காக நடத்தப்படுவது போல அரசு சித்தரிக்கிறது. இவ்வளவு தூரம் பிரச்சினையை வளர விடாமல் ஆரம்பத்திலேயே அரசு சரி செய்திருக்க வேண்டும். ஆசிரியர்களும் தேர்வு காலத்தை தவிர்த்து மற்ற மாதங்களில் போராட்டத்தில் ஈடுபட்டி ருக்கலாம்.

து.வைத்திலிங்கம் (தஞ்சாவூர்): என் மகள் தஞ்சாவூரில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். பொதுத்தேர்வு நெருங்கி வரும் இந்த நேரத்தில் ஆசிரியர்களின் தொடர் போராட்டங்களால் மாணவர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆசிரியர்கள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு போராட்டத்தை கைவிட்டு உடனே பணிக்குத் திரும்ப வேண்டும். அரசும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றை நிறைவேற்ற வேண்டும்.

மகராஜன் (திருநெல்வேலி): ஆசிரி யர்கள் தங்கள் உரிமைக்காக போராடுவது தவறல்ல. ஆனால், தேர்வு நெருங்கும் நேரத்தில் போராட்டம் நடத்துவது தேவையற்றது. அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். இந்த போராட்டத்தால் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

ஆனால், அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள் எளிய குடும்ப பின்னணி உள்ளவர்கள். போராட்டத்தால் அவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மறுபுறம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசும் போதிய அக்கறை காட்டவில்லை. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதை யாருமே எண்ணிப் பார்க்கவில்லை என்பது வேதனையாக உள்ளது.

கதிர்வேல் (சேலம்): வசதி இல்லாததால் என் குழந்தையை அரசு பள்ளியில் சேர்த்துள்ளேன். கடந்த ஒரு வாரமாக ஆசிரியர்கள் இல்லாததால், பள்ளியில் குழந்தை பாதுகாப்பாக இருக்குமா என்று அச்சமாக உள்ளது. அதனால், தினமும் 3 முறை பள்ளிக்குச் சென்று குழந்தையை பார்த்து வருகிறேன். ஆசிரியர்கள் பள்ளியில் இருந்தால் அந்த கவலை ஏற்படாது. ஆசிரியர்கள், அரசு நிர்வாகம் இரு தரப்புமே போராட்டத்துக்கு முன்னரே பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாணவர்கள் தரப்பில் தெரிவித்த கருத்துகள் வருமாறு:

கவிதா (மதுரை): கடந்த ஒரு வாரமாக பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு வராவிட்டாலும் நாங்கள் பள்ளிக்கு வந்தோம். உரிய ஆசிரியர்கள் இல்லாததால் நாங்களே ஏற்கெனவே நடத்திய பாடங்களை படித்துவிட்டு சென்றோம். ஆசிரியர்களிடம் இருந்து அரசு பிடிக்கும் தொகைக்கு கணக்கே இல்லை என்றபோது, அது பற்றி கேட்பது நியாயம்தானே. அவர்கள் போராட்டம் வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் அரசுத்துறைகளில் என்னை போன்றவர்கள் பணிக்கு செல்லும்போது, எங்களுக்கும்தானே அந்த பயன் கிடைக்கும். புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது என்பது சாத்தியமற்றது. பொதுத்தேர்வு நேரத்தில் இனிமேல் எங்களை புரிந்துகொண்டு புதிய ஆசிரியர்கள் பாடமெடுப்பது அவ்வளது சுலபமானதல்ல. இந்த விஷயத்தில் சுமுக தீர்வே சரியாக இருக்கும்.

கே.தினேஷ் (சேலம்): ஆசிரியர்களின் போராட்டம் சம்பள உயர்வுக்காக அல்ல. ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் மாணவர் நலன் கருதியே இருக்கின்றன. தொடக்கப் பள்ளிகளை மூடுவது அல்லது அருகில் உள்ள பள்ளியோடு இணைப்பது மாணவர்களுக்கு இடையூறாக இருக்கும். இதன் காரணமாக தனியார் பள்ளியை நாட வேண்டி இருக்கும் அல்லது படிப்பை கைவிட வேண்டியிருக்கும். அரசின் பல்வேறு நடவடிக்கை காரணமாக எதிர்காலத்தில் அரசு வேலை கிடைப்பது கடினமாகும். இதுபற்றி பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாமல் ஆசிரியர்களை மட்டும் குறை சொல்வது சரியல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x