

உடுமலையில் சில்லறை வியாபாரி கள், சாலையோரக் கடைகளில் பாலித்தீன் பொருட்களுக்கு மாற்றாக வாழை இலை, எவர் சில்வர் தட்டு, டம்ளர் ஆகியவற்றை பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது.
மாநில அரசுக்கு முன்னோடி யாக, திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் 2015 மார்ச் மாதமே பாலித்தீன் பொருட்கள் பயன்பாட்டுக்கும், விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வீடு களில் மக்கும், மக்காத குப்பை தரம் பிரித்து, துப்புரவுத் தொழிலாளர்கள் மூலமாக பெறும் நடவடிக்கை அமலில் உள்ளது. தற்போது, பாலித் தீன் பொருட்களுக்கான தடையும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நகராட்சிக்கு உட்பட்ட பூக்கடைகளில் வாழை இலை பொட்டலங் களில் பூக்களும், சாலையோரக் கடைகளில் சில்வர் கிண்ணம், கரண்டிகளில் துரித உணவு வகைகளும், தள்ளுவண்டிகள், இறைச்சி விற்பனை நிலையங்களில் பாலித்தீன் கவர்கள், பிளாஸ்டிக் தட்டு, டம்ளர்களுக்கு மாற்றுப் பொருள்களை உபயோகிக்கும் நிலையும் உருவாகியுள்ளது.
இதுதொடர்பாக உடுமலையில் தள்ளுவண்டி மூலமாக துரித உணவுகளை விநியோகித்து வரும் சேட் முகம்மது கூறும்போது, ‘பல ஆண்டுகளாக இத்தொழிலை நம்பி குடும்பம் நடத்தி வருகிறேன். ஒருமுறை பயன்படுத்தக்கூடிய தட்டு மற்றும் கரண்டிகளை பயன்படுத்தி வந்தேன். அதற்காக தினமும் ரூ.300 வரை செலவு செய்ய வேண்டி இருந்தது. நேற்று முன்தினம் ரூ.2500 செலவு செய்து, சில்வர் தட்டு மற்றும் கரண்டிகள் வாங்கி வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறி வருகிறேன். இதனால், தட்டுகளை அடிக்கடி கழுவ வேண்டிய சிரமத்தை தவிர வேறு ஒன்றும் இல்லை. இதன்மூலமாக தினசரி செய்ய வேண்டிய செலவு குறையும். அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. அனைவரும் கடைபிடிக்க வேண்டும்’ என்றார்.
தளி சாலையில் பூக்கடை நடத்திவரும் செந்தில்குமார் கூறும்போது, ‘முன்னோர்கள் வழிகாட்டுதல்படி பாரம்பரியமாக பூ வியாபாரம் செய்து வருகிறேன். இதுவரை பாலித்தீன் கவர்களை தான் பயன்படுத்தினேன். அரசின் தடை அறிவிப்பு வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பே செய்தித்தாள் மற்றும் வாழை இலைக்கு மாறிவிட்டேன். முன்னர், பல அளவு கொண்ட பாலித்தீன் பைகளுக்காக ரூ.700 செலவானது (ஒரு வாரத்துக்கு), தற்போது 2 கிலோ பழைய செய்தித்தாள் ரூ.40, வாழை இலை ரூ.100 என ரூ.140 மட்டுமே செலவாகிறது.
பாலித்தீன் பொருட்களுக்கான செலவை ஒப்பிடுகையில், பெருமளவு சேமிப்பாகிறது. பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு உள்ளது’ என்றார்.
நகர் நல அலுவலர் (பொ) எம்.சிவக்குமார் கூறும்போது, ‘உடுமலையில் தடை அறிவிக்கப் பட்ட 3 ஆண்டுகளிலும் பொதுமக்களும், வியாபாரிகளும் நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். தவிர்க்க முடியாத சில காரணங்களால், தடை செய்யப்பட்ட பொருட்களின் புழக்கம் சில்லறை வியாபாரத்தில் இருந்தது. தமிழக அரசின் அறிவிப்புக்குப் பின், அனைத்து தரப்பிலும் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.