

அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை, அரசு புதிதாக தொடங்கி உள்ள எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு பணி அமர்த்துவது தொடர்பான அரசாணை ஜனவரி 30 வரை நடைமுறைப்படுத்தப்படாது என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசுத்தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் வின்சென்ட் பால்ராஜ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தொடக்க கல்வித்துறை சார்பில் இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகின்றனர்.
இந்நிலையில், அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை, அரசு புதிதாக தொடங்கியுள்ள மழலையர் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் பணி அமர்த்த 11.12.2018 அன்று சமூக நலத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 89-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழலையர் வகுப்புகளை எடுக்க ஆசிரியர்கள் கிண்டர் கார்டன் பயிற்சி அல்லது மாண்டிசோரி கல்வி முடித்திருக்க வேண்டும். இந்த பயிற்சி முடிக்காத, இடைநிலை ஆசிரியர்களை மழலையர் வகுப்புகளுக்கு பணியமர்த்துவது ஏற்கத்தக்கதல்ல.
இடைநிலை ஆசிரியர்கள் உபரியாக இருந்தால், அதே துறையில் தான் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் விதிகளுக்கு மாறாக தொடக்க கல்வியில் இருந்து, சமூக நலத்துறைக்கு மாற்றி அரசாணை வெளியிட்டிருப்பது ஏற்புடையது அல்ல.
எனவே, தொடக்க கல்வித்துறையின் கீழ் உள்ள இடைநிலை ஆசிரியர்களை, சமூக நலத்துறையின் கீழ் உள்ள அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் ஆசிரியர்களாக நியமிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் இது தொடர்பாக சமூக நலத்துறை 11.12.18. அன்று வெளியிட்ட அராணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சுப்பிரமணியன் முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்திலுள்ள தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 1,075 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், 1,909 ஆசிரியர்கள் உபரியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 2018-19 ஆம் கல்வி ஆண்டில் ஓய்வுபெற்றவர்களின் பணியிடங்களும் காலியாக இருப்பதாக் தெரிவித்தனர்.
அதையடுத்து ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள போது, எவ்வாறு உபரி ஆசிரியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது என கேள்வி எழுப்பிய நீதிபதி, எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு மாண்டிசோரி அல்லது கிண்டர் கார்டன் பயிற்சி பெற்றவர்களையே நியமிக்க வேண்டுமென விதி உள்ளது. இந்நிலையில் இடைநிலை ஆசிரியர்களை எவ்வாறு பணியமர்த்துகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் தளர்வு கோரி, தேசிய ஆசிரியர் கல்வி கழகத்தில் விண்ணப்பித்துள்ளதாகவும், அது நிலுவையில் இருப்பதாகவுன் தெரிவித்தார். மேலும், ஜனவரி 30 வரை இந்த அரசாணை நடைமுறைப்படுத்தப்படாது என தெரிவித்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதி வழக்கை ஜனவரி 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.