Published : 30 Jan 2019 11:28 AM
Last Updated : 30 Jan 2019 11:28 AM

இன்றைய தலைமுறையினரோடு இடைவெளியை குறைத்து மூத்த குடிமக்களின் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கைக்கான வழிகள்: சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் கருத்தரங்கம்

இன்றைய தலைமுறையினரோடு இருக்கும் இடைவெளியை குறைத்து மூத்த குடிமக்கள் மகிழ்ச்சியாக வாழ்வது குறித்த விவாதம் சென்னையில் நடைபெற்றது.

மூத்த குடிமக்கள் ஆதரவு மன்றம் சார்பில் ‘மூத்த முடிமக்களின் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கைக்கான வழிகள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நேற்று நடந்தது. மூத்த குடிமக்கள் ஆதரவு மன்றத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசம் கருத்தரங்கத்துக்கு தலைமைத் தாங்கி வரவேற்புரை ஆற்றினார்.

உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் டி.என்.வள்ளிநாயகம், எஸ்.ஜெகதீசன், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.எஸ். ஜவகர், இந்து தமிழ் இணையதள ஆசிரியர் பாரதி தமிழன் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், ஏராளமான மூத்த குடிமக்கள் பங்கேற்றனர். இன்றைய தலைமுறையினருக்கும், மூத்த குடிமக்களுக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பது, மூத்த குடிமக்கள் எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்தக் கருத்தரங்கில் முன்னாள் நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் பேசும்போது, “வயதானவர்களுக்கு ஒரு துணை வேண்டும். அந்த துணையோடு இணைந்து வாழ்ந்தால் 120 ஆண்டுகள் வாழலாம்” என்றார்.

நிகழ்ச்சியில் வி.ஜி.சந்தோசம் பேசும்போது, “மனிதன் பிறக்கின்றான். வாழ்கின்றான். மறைகின்றான். வாழ்கின்ற காலத்தில் வரலாறு படைக்க வேண்டும். அந்த வரலாற்றை சமுதாயத்துக்கும், இளைஞர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.

முதலில் நாம் குழந்தைகளை அழைத்துச் செல்கின்றோம். வயது ஆக ஆக அவர்கள் நம்மை அழைத்துச் செல்கின்றனர். முதியவர்கள் ஒவ்வொருவரும் தன்னை பார்த்துக் கொள்ள வேண்டும். உலகத்திலேயே சிறந்த நாடு இந்தியா. மகாத்மா காந்தி, காமராஜர் கனவை நனவாக்க வேண்டும்” என்றார்.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.எஸ்.ஜவகர் பேசும்போது, “முதியவர்கள் கோபத்தை முழுவதுமாக குறைத்துக் கொள்ள வேண்டும். இன்றைய தலைமுறையினர் நம்மைவிட திறமையானவர்கள். அவர்களிடம் நல்லது கெட்டதை சொல்லும் விதத்தில் சொல்ல வேண்டும். அவர்களுடன் இணைந்து பயணிக்க வேண்டும்.

நம்முடைய சிறு வயதில் நிறைவேறாத ஆசையை நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும். வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்” என்றார். நிறைவாக மூத்த குடிமக்கள் ஆதரவு மன்றத் தின் செயலாளர் ஆர்.சுப்பராஜ் நன்றியுரையாற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x