Published : 18 Jan 2019 04:57 PM
Last Updated : 18 Jan 2019 04:57 PM

83 ஆண்டுகளாக மட்டன் பிரியாணி பிரசாதம்: வரும் 25-ம் தேதி திருவிழாவுக்காக மதுரை பக்தர்கள் காத்திருப்பு

கடந்த 83 ஆண்டுகளாகப் பக்தர்களுக்கு மட்டன் பிரியாணி பிரசாதமாக மதுரை அருகே ஒரு கோயிலில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலின் திருவிழா வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளதால், பக்தர்கள் பிரியாணிக்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுக்காவில் உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் உள்ள முனீஸ்வரன் கோயிலில் இந்தத் திருவிழா ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி நடக்கிறது. மதுரையில் இருந்து 45 கி.மீ. தொலைவிலும், விருதுநகரில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் வடக்கம்பட்டி அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மட்டுமின்றி, திருவிழா அன்று சாலையில் செல்லும் அனைவருக்கும் மட்டன் பிரியாணி பிரசாதமாக வரும் 25-ம் தேதி வழங்கப்படும்.

வடக்கம்பட்டி கிராமத்தில் 3 நாட்கள் முனியாண்டி சாமி கோயிலில் நடத்தப்படும் இந்தத் திருவிழாவில் 2 ஆயிரம் கிலோ அரிசி, ஆட்டிறைச்சி பிரியாணியாக இரவு பகலாகச் செய்யப்பட்டு பக்தர்களுக்குப் பரிமாறப்படும்.

இதுகுறித்து கோயிலின் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர் என். முனீஸ்வரன் கூறுகையில், ''திருவிழா அன்று 50க்கும் மேற்பட்ட பெரிய பாத்திரங்களில் இரவு முழுவதும் பிரியாணி சமைக்கப்பட்டு அதிகாலை 4 மணிக்கு முனீஸ்வரருக்கு படைக்கப்படும். அதன்பின் காலை 5 மணி முதல் பக்தர்களுக்கு காலை உணவாகப் பிரியாணி வழங்கப்படும்.

பிரியாணியை காலை உணவாகச் சாப்பிடுவதே தனிச்சிறப்புதான். எந்த விதமான வேறுபாடும் இன்றி இந்தக் கோயிலுக்கு வருபவர்கள் மட்டுமின்றி, சாலையில் செல்லும் யார் வேண்டுமானாலும் பிரியாணி சாப்பிடலாம். பாத்திரங்களில் வாங்கிச் செல்லலாம். அன்றைய தினம் அனைத்து வயதினரும் அமர்ந்து இங்கு சாப்பிடுவதைக் காணலாம். மக்கள் மட்டுமல்ல, முனியாண்டி சாமியே பிரியாணிப் பிரியர். கடந்த ஆண்டு நாங்கள் 200 ஆடுகள், 250 சேவல்கள், 1,800 கிலோ அரிசி ஆகியவை சேர்த்து பிரியாணி செய்தோம். இந்த ஆண்டு இதைக் காட்டிலும் அதிகரிக்கும்.

வடக்கம்பட்டியில் உள்ள அனைத்து மக்களும் பிரியாணிப் பிரியர்கள். மதுரையில் உள்ள ஸ்ரீமுனியாண்டி விலாஸ் ஹோட்டல் கடந்த 70களில் தொடங்கப்பட்டது. இந்தக் கடையின் பெயரில் தென்னிந்தியா முழுவதும் ஆயிரம் கடைகள் இருக்கின்றன. முதன் முதலாக முனியாண்டி விலாஸ் ஹோட்டல் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த எஸ்விஎஸ் சுப்பா நாயுடு என்பவர் தொடங்கினார். அவரின் முயற்சியால் இந்தத் திருவிழா நடந்து வருகிறது.

அதன்பின் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், நண்பர்கள் எனப் பலரும் முனியாண்டி விலாஸ் கடையைத் தொடங்கினார்கள். மதுரை என்ற அடைமொழியோடு தொடங்கி நடத்திவருவதால், அனைவரும் சேர்ந்து இந்தத் திருவிழாவை நடத்துகிறோம்''.

இவ்வாறு முனீஸ்வரன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x