

ஜாக்டோ - ஜியோ போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முக்கிய நிர்வாகிகளை கைது செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது, ஊதிய முரண்பாடுகளை சரிசெய்வது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில் கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஊழியர்கள் பணிக்குச் செல்லாததால், அரசு அலுவலகங்கள் வெறிச்சோடிப் போயுள்ளன. ஆசிரியர்களும் வேலைக்குச் செல்லாததால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால், அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், 4-வது நாளான நேற்று மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் எழிலகம் அருகே ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன், தியாகராஜன், தாஸ் உள்ளிட்டோர் தலைமையில் 600-க்கும் அதிகமான அரசு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவானதால், ஒட்டு மொத்த போராட்டக் குழுவினரையும் போலீஸார் கைது செய்து சிந்தாதிரிப்பேட்டை சமூகநலக் கூடத்தில் அடைத்தனர்.
ஒருங்கிணைப்பாளர் மாயவன் கூறும்போது, ‘‘தேர்வு நேரத்தில் போராட்டம் நடத்த முடிவு செய்யவில்லை. எங்கள் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கடந்த 3 ஆண்டுகளாக போராடி வருகிறோம். எங்கள் பிரச்சினையை தீர்க்காமல் தாமதம் செய்வது அரசின் தவறு. எனவே, மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் எனில், அரசுதான் பொறுப்பு. மாணவர்கள் நலனில் எங்களுக்கு அதிக அக்கறை உள்ளது. மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தியாவது இந்த பாதிப்பை ஈடுசெய்வோம். தமிழக அரசு எங்களை அழைத்துப் பேசி தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும்.
அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து 28-ம் தேதி நடக்க உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதுபோல, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஜாக்டோ - ஜியோ சார்பில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். பெரும்பாலான கிராமங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், பள்ளிகளில் இன்று குடியரசு தின விழா கொண்டாடப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது.
அதேநேரம், இன்று பள்ளிகளை திறந்து கட்டாயம் தேசியக்கொடி ஏற்றுவோம். தேசக் கடமையில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்று பெரும்பாலான ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. பள்ளிக்கல்வித் துறை சார்பிலும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அரசுக்கு ஆதரவாக இருந்த தலைமைச் செயலக சங்கம் திடீரென ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் இணைந்துள்ளது. தலைமை செயலக சங்க நிர்வாகிகள் வெங்கடேசன், ஹரி தலைமையிலான ஒரு பிரிவினர் வரும் 28-ம் தேதி வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளனர்.
மற்றொரு பிரிவினர் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மனிதச் சங்கிலி ஊர்வலம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், தீவிரமடைந்து வரும் போராட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் 200 பேர் கொண்ட பட்டியலை அரசு தயாரித்துள்ளது. முதல்கட்டமாக அவர்களை கைது செய்து, துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
5 லட்சம் பேருக்கு நோட்டீஸ் துறைவாரியாக, பணிக்கு வராத அரசு ஊழியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. அரசு ஊழியர் நடத்தை விதி ‘17பி’ அடிப்படையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை குறிப்பிட்டு, பணிக்கு வராததற்கான விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, பொதுப்பணி, வருவாய் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த சேர்ந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நோட்டீஸுக்கு அவர்கள் 15 நாட்களுக்குள் பதில் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல, மாவட்ட வாரியாக பணிக்கு வராத ஆசிரியர்கள் பற்றிய விவரம், முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் தயாரிக்கப்பட்டது. அதில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவர்கள் அனைவருக்கும் ‘17பி’ விதியின் அடிப்படையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் படிப்படியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகின்றன. கல்வி அலுவலக ஊழியர்கள், அதிகாரிகளும் வரும் 28-ம் தேதி முதல் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அதன்பிறகு, நோட்டீஸ் விநியோகப் பணியும் பாதிக்கப்படும் என்று தெரிகிறது. |