சென்னையில் பயங்கரம்: பெருங்குடி குப்பைமேட்டில் குப்பையுடன் பார்சல் செய்யப்பட்டு வந்த இளம்பெண் உடல் பாகங்கள்

சென்னையில் பயங்கரம்: பெருங்குடி குப்பைமேட்டில் குப்பையுடன் பார்சல் செய்யப்பட்டு வந்த இளம்பெண் உடல் பாகங்கள்
Updated on
2 min read

சென்னை பெருங்குடி குப்பைமேட்டில் குப்பையுடன் குப்பையாக இளம்பெண்ணின் கை, கால்கள் பார்சல் செய்யப்பட்டு வந்தது கண்ட மாநகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சென்னையில் குற்றச்செயலகள் அதிகரித்து வந்தவண்ணம் உள்ளன. 24 மணி நேரத்தில் 4 கொலைகள் என்பதை தாண்டி 5 வது கொலையும் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. சென்னை பெருங்குடியில் குப்பைக்கிடங்கு உள்ளது. இந்த குப்பைக் கிடங்கு சென்னையில் முக்கியமான குப்பைக்கிடங்கு. சென்னையில் சேகரிக்கப்படும் குப்பைகள் பெருங்குடி குப்பைக்கிடங்கு மற்றும் கொடுங்கையூர் குப்பைகிடங்குக்கு கொண்டுச் செல்லப்படும்.

லாரிகள் மூலம் இங்கு சேகரிக்கப்பட்ட குப்பைகள் கொண்டுவரப்படும். பின்னர் இங்கு மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என ஊழியர்கள் தரம் பிரிப்பார்கள். சென்னை முழுதும் ஆங்காங்கே சேகரிக்கப்படும் குப்பைகள் நுங்கம்பாக்கம், ஐஸ் ஹவுஸ், புளியந்தோப்பு, புதுப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சேகரிக்கப்பட்டு பின்னர் பெருங்குடி, கொடுங்கையூருக்கு கொண்டுச் செல்லப்படும்.

சென்னையில் ஒரு நாளைக்கு சுமார் 5000 டன் (5000000 கிலோ) குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இப்படி வந்த குப்பையில்தான் இளம்பெண்ணின் உடலின் கை, கால்களை மட்டுமே பார்சல் செய்யப்பட்டு பெருங்குடிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இளம்பெண்ணைக் கொலை செய்து உடலை கச்சிதமாக பார்சல் செய்து குப்பையில் வீசியுள்ளது ஒரு கும்பல்.

இதுகுறித்த தகவல் அறிந்த பள்ளிக்கரணை போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக்கைப்பற்றி விசாரணை நடத்தினர். உடல் வந்த லாரி குறித்து விசாரணை நடத்தியதில் அது கோடம்பாக்கம் பவர் ஹவுசிலிருந்து குப்பையை ஏற்றிவந்தது தெரியவந்துள்ளது.

ஆகவே கொலை செய்யப்பட்ட பெண் அப்பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் அல்லது கொலை செய்து ஒரு இடத்தில் பார்சல் செய்து போலீஸாரை குழப்ப அங்கு வந்து பார்சலை வீசிவிட்டு சென்றிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். கை, கால்கள் அழுகாத நிலையில் உள்ளதால் நேற்றிரவு கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.

30-லிருந்து 35 வயது மதிக்கத்தக்க அப்பெண்ணின் கையில் இரண்டு இடங்களில் பச்சைக்குத்தப்பட்டுள்ளது. உடலின் நிறம், டாட்டுவை வைத்து பார்க்கும்போது அப்பெண் வசதியானவர் என்று போலீஸார் கருதுகின்றனர். கால்களில் மெட்டி உள்ளதால் திருமணமான பெண் என கருதுகின்றனர்.

மேலும் கொலை செய்யப்படுவதற்கு முன் அப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளதாக போலீஸார் கருதுகின்றனர். கை, கால்கள் மட்டும் கிடைத்த நிலையில் உடல் எங்கே என போலீஸார் தேடுகின்றனர். நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் பகுதியில் உள்ள குப்பைகள் கொட்டும் இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பரிசோதிக்க முடிவு செய்துள்ளனர்.

மேலும் அந்த இடத்தில் தேடிப்பார்த்தும் உடலின் மற்ற பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து போலீஸார்  கோடம்பாக்கம் பகுதியில் சமீபத்தில் பெண்கள் யாராவது காணாமல் போனார்களா? என்ற தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். வலது கையில் பட்டாம்பூச்சி மற்றும் டிராகன் படம் பச்சை குத்தப்பட்டுள்ளது.

பெண்ணின் கைரேகைப் பதிவை எடுத்து ஆதார் எண்  மூலம் யார் என அடையாளம் காணும் முயற்சியில் போலீஸார் இறங்க உள்ளனர். அந்த பெண் யார்? எந்த ஊரை? சேர்ந்தவர் என்ற விவரம் தெரிந்தால் தான் கொலைக்கான காரணம், எப்படி நடந்தது என்பது தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.            .
 

சென்னை கொலை நகரமாக மாறி வருகிறதோ என்கிற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இளம்பெண் ஒருவர் கொல்லப்பட்டு உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கை, கால்கள் மட்டும் பார்சல் கட்டி வீசப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே 4 கொலைகள் 24 மணி நேரத்தில் நடந்த நிலையில் இதையும்சேர்த்து 5-வது கொலை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in