

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 83,103 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இவர்களில் 2449 பேர் மாணவர்கள். மாணவர்களை தற்கொலைக்குத் தூண்டியதாக 30 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக காவல்துறை இயக்குநர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் நடுகாவிரி தூய தாமஸ் ஆர்.சி. உயர் நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவர் ரத்தினசபாபதி (14) 2012 மார்ச் 7-ல் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜான் கென்னடி மீது நடுகாவிரி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், திருவையாறு நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விசாரிக்க தடை விதிக்கக்கோரியும் ஜான் கென்னடி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஆசிரியர்கள் கண்டித்ததால் தற்கொலை செய்த மாணவர்களின் விவரம் தாக்கல் செய்ய நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டார்.
இந்நிலையில், தமிழக காவல் துறை இயக்குநர் சார்பில் ஐஜி பி.தாமரைக்கண்ணன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் செவ்வாய்க்கிழமை தற்கொலை விவரங்களை தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் 2009-ம் ஆண்டிலிருந்து 2014 ஆகஸ்ட் வரை 83,103 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் 2449 பேர் மாணவர்கள் ஆவர். மாணவர்கள் தற்கொலைக்கு தூண்டியதாக 30 ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்கொலையில் தலைநகர் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் 5 ஆண்டுகளில் 13506 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் 383 பேர் மாணவர்கள். 2வது இடத்தில் கோவை உள்ளது. இங்கு 153 மாணவர்கள் உள்பட 6383 பேர் தற்கொலை செய்துள்ளனர். 3-வது இடத்தில் நெல்லை நகர் மற்றும் புறநகர் உள்ளது. நெல்லையில் 283 மாணவர்கள் உள்பட 4946 பேர் தற்கொலை செய்துள்ளனர். 4வது இடத்தில் மதுரை உள்ளது. மதுரை நகர் மற்றும் புறநகரில் 217 மாணவர்கள் உள்பட 4441 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
மாவட்ட அளவில் காஞ்சிபுரம் முதலிடத்தில் உள்ளது. காஞ்சிபுரத்தில் 3298, தஞ்சாவூரில் 3257, வேலூரில் 3193, கன்னியாகுமரியில் 3046, தூத்துக்குடியில் 2997 பேர் தற்கொலை செய்துள்ளனர். விருதுநகரில் 1735, திண்டுக்கல் 2663, தேனி 1887, ராமநாதபுரம் 1027, சிவகங்கை 1369 பேர் தற்கொலை செய்துள்ளனர் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.