

சார்லி சாப்ளின்- 2 திரைப்படத்திற்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் வரும் 24-ம் தேதிக்குள் பதில் அளிக்க தயாரிப்பாளர் டி.சிவாவுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்மா கிரியேசன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டி.சிவா தயாரிப்பில், இயக்குனர் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் நடிகர்கள் பிரபு தேவா, பிரபு, நடிகை நிக்கி கல்ராணி உள்ளிட்டோர் நடிப்பில் சார்லி சாப்ளின்-2 என்ற திரைப்படம் வரும் 25-ம் தேதி திரைக்கு வரஉள்ளது.
இந்நிலையில் இந்த படத்திற்கு தடை விதிக்க கோரி மதுரையை சேர்ந்த சினிமா பைனான்சியர் சோமசுந்தரம் என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் அம்மா கிரியேசன்ஸ் உரிமையாளர் டி.சிவா கடந்த 2007-ம் ஆண்டு என்னிடம் 26 லட்சம் ரூபாய் கடன் பெற்றார்.
இதற்காக அவர் தயாரித்து வெளிவரும் படத்திற்கு முன்பாக கடன் தொகையை அளித்து விடுவதாக தெரிவித்தார். அதன்படி இதுவரை 11 லட்சம் ரூபாய் திருப்பி செலுத்திவிட்டார். மீதம் உள்ள தொகையை அவர் திருப்பி அளிக்கவில்லை. தற்போது வட்டியுடன் சேர்த்து 16 லட்சம் ரூபாய் பாக்கி உள்ளது.
தற்போது டி.சிவா தயாரிப்பில் சார்லி சாப்ளின்-2 திரைப்படம் வெளியாக உள்ளது. எனவே படத்தை வெளியிடுவதற்கு முன்னர் பணத்தை திருப்பி செலுத்த உத்தரவிட வேண்டும் இல்லை என்றால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு சென்னை இரண்டாவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மனு தொடர்பாக தயாரிப்பாளர் டி.சிவா வரும் 24-ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தார்.