Published : 21 Jan 2019 09:21 AM
Last Updated : 21 Jan 2019 09:21 AM

ரயில் பயணிகளின் தொடர் புகார் எதிரொலி: ரத்து செய்யப்படும் டிக்கெட் தொகை உடனடியாக கிடைக்க புதிய திட்டம்: ஐஆர்சிடிசியின் ‘பேமென்ட் கேட்வே’ விரைவில் தொடக்கம்

ரத்து செய்யப்படும் ரயில் டிக்கெட் தொகையை பயணிகள் உடனடியாக திரும்பப் பெற ஐஆர்சிடிசி சார்பில் ‘ஐ’ எனும் புதிய நுழைவு கட்டண முறை (பேமென்ட் கேட்வே) விரைவில் தொடங்கப்படவுள்ளது.

வெளியூர் பயணத்துக்கு பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை முதலில் தேர்வு செய்கின்றனர். தற்போதுள்ள நிலவரப்படி சுமார் 70 சதவீத மக்கள் ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். கடைசி நேரம் வரையில் டிக்கெட் உறுதியாகாதது, பல்வேறு அவசர காரணங்களால் பயணிகள் சிலர் பயணத்தை ரத்து செய்து, டிக்கெட் ரத்து செய்து விடுகின்றனர்.

ரயில் புறப்பட்ட பிறகு டிக் கெட்டை ரத்து செய்தால் கட்டண தொகை திருப்பி அளிக்கப்படாது. ரயில் புறப்படுவதற்கு 4 மணிநேரத்துக்கு முன்பாக ரத்து செய்தால் மட்டுமே 50 சதவீத பணம்திருப்பியளிக்கப்படும். காத்திருப்புபட்டியல், ஆர்.ஏ.சி. டிக்கெட்களை பொறுத்தவரை, ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரம்முன்பாக ரத்து செய்தால் மட்டுமேபணம் திருப்பியளிக்கப்படும் என்பது நடைமுறையில் இருக்கிறது.

டிக்கெட் ரத்து செய்த பிறகு அடுத்த 5 நாட்களில் கட்டண தொகைதிருப்பி அளிக்க வேண்டுமென்பது ரயில்வேயின் விதியாகும். ஆனால், டிக்கெட் ரத்து செய்து 15 நாட்கள் ஆகியும் தொகை திரும்ப கிடைப்பதில்லை.

இதுதொடர்பாக ஐஆர்சிடிசி உயர் அதிகாரிகள் கூறியதாவது: டிக்கெட் ரத்து செய்யப்பட்டவுடன் அதற்கான தொகையை உடனடியாக திரும்ப அனுப்பி விடுகிறோம். அதிகபட்சமாக 5 நாட்களுக்குள் தொகை சென்றடைய வேண்டுமெனவும் வங்கிகளுக்கு உத்தரவிடுகிறோம். டெல்லியில் சமீபத்தில் பல்வேறு வங்கி அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த பிரச்சினையை எடுத்து கூறினோம்.

மேலும், டிக்கெட் கட்டணம் செலுத்தும்போது ஐஆர்சிடிசி வழியாகவும் கட்டணம் செலுத்த வசதியாக ‘ஐ’ எனும் புதிய நுழைவுகட்டண முறை (பேமென்ட் கேட்வே) விரைவில் தொடங்கவுள்ளோம். இதனால், ரத்து செய்யப்படும் டிக்கெட் தொகை உடனடியாக கிடைக்க வழிவகை செய்யவுள்ளோம். இதற்கான தகவல்களும் பிறகு அறிவிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x