

சென்னையில் மீண்டும் ‘பஸ் டே’ கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது. நேற்று முன்தினம் பொதுமக்களுக்கு இடையூறாக தடையை மீறி பேருந்து தினம் கொண்டாடிய அம்பேத்கர் கலைக் கல்லூரி மாணவர்கள் 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள சில குறிப்பிட்ட கல்லூரிகளில் பயிலும் சில மாணவர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்வதும், யார் ‘ரூட்டு தல’ என்ற கவுரவப் பிரச்சினையில் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதும் தொடர்ச்சியான சம்பவமாக நடைபெற்று வருகிறது.
'பஸ் டே' என்ற பெயரில் தங்களுக்குள் மோதிக்கொண்டதும், பேருந்தை ஜோடித்து அதன் மேல் ஏறி ஆட்டம் போடுவதும், சாலையில் ஊர்வலம் போல பேருந்தை மெதுவாகச் செலுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதும் சில ஆண்டுகளுக்கு முன் வரை அடிக்கடி நடக்கும் நிகழ்வாக இருந்தது.
இதை முறியடிக்கும் வகையில் போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்து 'பஸ் டே'வுக்குத் தடை விதித்தனர். கல்லூரி மாணவர்கள், முதல்வர்கள் அடங்கிய கூட்டத்தை நடத்தி இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். அதன் பின்னரும் குறிப்பிட்ட ரூட்டில் கல்லூரிக்கு வரும் மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, நந்தனம் கல்லூரி, புதுக்கல்லூரி மாணவர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்வதும் அடிக்கடி நிகழ்வதுண்டு.
அவ்வாறு மோதிக்கொள்பவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கிக்கொண்டதுண்டு. அவ்வப்போது போலீஸார் சோதனை நடத்தி ஆயுதங்களுடன் உள்ள மாணவர்கள், முன்னாள் மாணவர்களைக் கைது செய்தது சமீபத்திய நிகழ்வு. இதனால் சமீப காலமாக சென்னையில் மாணவர்களிடையேயான மோதல் முடிவுக்கு வந்தது. ஆனாலும் இது அவ்வப்போது தலைத்தூக்கத்தான் செய்கிறது.
கடந்த ஜூன் 19-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டது, அப்போது கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்துகளின் கூரையில் ஏறி, கத்திகளை சுற்றியபடி ரகளையில் ஈடுபட்டனர். மாநிலக் கல்லூரிக்கு 6-டி பேருந்தில் வந்த மாணவர்கள், கத்தியைக் காட்டி ரகளையில் ஈடுபட்டனர். இதேபோல, 21-ஜி பேருந்தில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட 6 மாணவர்களையும் போலீசார் பிடித்தனர்.
அன்று மட்டும் ஒரே நாளில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் 13 பேர், நந்தனம் கல்லூரி மாணவர்கள் 33 பேர், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 4 பேர் என மொத்தம் 50 பேர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் இருந்து 15 கத்திகள், ஒரு சிறிய கோடாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த ஆகஸ்டு மாதம் காரனோடையில் இருந்து பிராட்வேக்கு 57-எப் மாநகரப் பேருந்து சென்றது. அந்தப் பேருந்தில் ஏறிய பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கையில் இரண்டடி நீள பட்டாக்கத்தியுடன் பேருந்தின் முன், பின் படிக்கட்டுகளை ஆக்கிரமித்தனர். பயணிகளை உள்ளே செல்ல மிரட்டிய அவர்கள் பேருந்தில் தொங்கியபடி மாநிலக் கல்லூரிக்கு ஜே என்று கோஷமிட்டபடி வந்தனர்.
பேருந்து நடத்துநர், ஓட்டுநரையும் மிரட்டிய அவர்கள் சாலையில் சென்றோரை மிரட்டும் வகையில் சாலையில் பட்டாக்கத்தியைத் தீட்டியபடி சென்றனர். இதனால் சாலையில் சென்றவர்கள் அச்சத்தில் அந்தப் பேருந்து பக்கமே செல்லவில்லை. இந்தக்காட்சி வைரலானதை அடுத்து போலீஸார் சிலரைப்பிடித்து கைது செய்தனர்.
பஸ்டே குறித்து ஒரு வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனைத் தெரிவித்தனர். “பஸ்டே என மாணவர்களால் பேருந்து தினம் என கொண்டாடும்போது என்ன நடக்கிறது என தெரியுமா? சேதம் ஏற்பட்டால் பாரம்பரிய கட்டிடத்தை கூட மாற்றி அமைக்கலாம், ஆனால் மாணவர்களின் குணநலன்களுக்கு சேதம் ஏற்பட்டால் திருத்த முடியாது.” என தெரிவித்தனர்.
இந்நிலையில் மீண்டும் மாணவர்கள் பஸ்டே கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிராட்வேயில் இருந்து செங்குன்றம் நோக்கி செல்லும் 57.எப் வழித்தட பேருந்தில், வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள், நேற்று முன்தினம் தடையை மீறி பேருந்து தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்..
பேருந்தின் மீது ஏறி நின்றுக்கொண்டு ஆட்டம் போட்டனர். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர். பேருந்தில் உள்ள பயணிகளும் பேருந்தை மெதுவாக இயக்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சக வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட்டனர்.
இதை சாலையில் நின்ற பொதுமக்களில் சிலர் செல்போனில் படம்பிடித்து வாட்ஸ் அப் வலைதளங்களில் வெளியிட்டனர். இது வைரலானது. இது குறித்த புகாரைப்பெற்ற எம்கேபி நகர் போலீஸார் பஸ்டே தொடர்பான வீடியோ காட்சி மூலம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தடையை மீறி பேருந்து தினம் கொண்டாடியது பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தது போன்ற செயல்களுக்காக அப்துல் ஹாகிப், பிரவின், நவின், ஹிர்ஃபான் பாஷா, மோகன் குமார் ஆகிய 5 மாணவர்களை அடையாளம் கண்டு போலீஸார் கைது செய்தனர்.
மேலும் சில மாணவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.