

போலி ஏடிஎம் கார்டுகள் தயாரித்து பலரது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடிய கும்பலைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை எச்டிஎப்சி வங்கியின் தலைமை மேலாளர் கோபிநாத், காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஒரு புகார் மனுவைக் கொடுத்தார்.
“எங்கள் வங்கி வாடிக்கையாளர்களின் டெபிட், கிரெடிட் கார்டுகளின் தகவல்களை திருடி போலி ஏடிஎம் கார்டுகள் தயாரித்து, ஏடிஎம் மையங்களில் இருந்து பணம் திருடப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபடும் கும்பலை கைது செய்ய வேண்டும்" என்று அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீஸார், சிவசூர்யா, விஜய் சார்லஸ், இம்ரான், ராஜா ஆகியோரை இரு மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர். இவர்கள் அனைவரும் தற்போது புழல் சிறையில் உள்ளனர்.
மோசடி கும்பலுடன் தொடர்பு
இந்த மோசடி கும்பலுடன் தொடர்புடைய பாலகிருஷ்ணன் என்பரை போலீஸார் தொடர்ந்து தேடிவந்தனர்.
இந்நிலையில் சாலிகிராமம் காந்திநகரில் தலைமறைவாக இருந்த பாலகிருஷ்ணனை நேற்று காலையில் போலீஸார் கைது செய்தனர். அவரது அறையில் நடத்தப்பட்ட சோதனையின்போது ஏராளமான போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
வங்கியில் கடன் வாங்குபவர்களுக்கு போலியாக ஆவணங்களை தயார் செய்து கொடுக்கும் மோசடி வேலையையும் பாலகிருஷ்ணன் செய்து வந்தது தெரிந்தது. இது தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.