

ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப இன்று காலை 9 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, காலியிடங்கள் கணக் கெடுக்கப்பட்டு அங்கு தற்காலிக ஆசி ரியர்கள் உடனடியாக பணியமர்த்தப் படுவார்கள் என்று பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது. இதற்கிடையில், கடந்த ஒரு வாரமாக நீடித்துவரும் போராட்டத்துக்கு மேலும் சில சங்கங்கள் ஆதரவு தெரிவித்து, இன்றுமுதல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில் கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் அரசு அலுவலகங்களில் அன்றாடப் பணிகள் முடங்கியுள்ளன. அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதால், ஆசிரி யர்கள் 28-ம் தேதிக்குள் (நேற்று) பணிக்கு திரும்பாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை எச்சரித்தது.
ஆனாலும், போராட்டம் நேற்று 7-வது நாளாக தொடர்ந்தது. வழக்கத்தைவிட நேற்று அதிக ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். பெண் ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிக மாக இருந்தது. அனைத்து மாவட்டங் களிலும் தாலுகா மற்றும் மாவட்ட தலைமையகங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சாலை மறியலும் செய்தனர்.
சென்னையில் பல்வேறு அரசுத் துறைகளின் தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ள சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் நேற்று காலை 10 மணிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூடினர். ஜாக்டோ - ஜியோ தென் சென்னை மாவட்ட செயலாளர் வெங்க டேசன், வடசென்னை மாவட்ட தலைவர் அந்தோணிசாமி, மாநில பொருளாளர் தங்கராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.ரகுராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர் சங்கம், தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்தவர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். காலை 11 மணி அளவில் எழிலகம் முன்பு கடற்கரைச் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்ட 6 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப இன்று காலை 9 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் கூறியதாவது:
ஆசிரியர்கள் 28-ம் தேதி பணிக்கு திரும்ப அறிவுறுத்தினோம். அதை ஏற்று 5 சதவீதம் பேர் பணிக்கு திரும்பினர். பணியில் சேர தயாராக இருப்பதாக பலர் தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்து வருகின்றனர். தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது அரசின் நோக்கம் அல்ல. பொதுத் தேர்வுகள் நடக்கவுள்ள நிலையில் மாணவர்களின் நலனையும் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது. பணிக்கு திரும்ப விரும்பும் ஆசிரியர்கள் தொடக்கக் கல்வித் துறையாக இருந்தால் சம்பந்தப் பட்ட மாவட்ட கல்வி அதிகாரிக்கும், பள்ளிக் கல்வித் துறையாக இருந் தால் மாவட்ட முதன்மை கல்வி அதி காரிக்கும் எஸ்எம்எஸ் அல்லது வாட்ஸ்-அப் மூலமாக பணிக்கு திரும்பும் விவரத்தை 29-ம் தேதி காலை 9 மணிக்குள் தெரிவித்து விட்டு பள்ளியில் பணியில் சேர்ந்து கொள்ளலாம். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாது.
காலை 9 மணிக்குப் பிறகு எந்த வேண்டுகோளும் ஏற்கப்படாது. அதன் பிறகு, காலியிடங்கள் கணக்கெடுக்கப் பட்டு அங்கு தற்காலிக ஆசிரியர் கள் உடனடியாக பணியமர்த்தப் படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
காலிப் பணியிடங்கள்
‘வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு கைதாகி பணி இடைநீக்கம் செய்யப் பட்டுள்ள ஆசிரியர்களின் பணியிடங் கள் காலிப் பணியிடங்களாக கருதப் படும். தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர்கள் விரும்பினால், அவர் களை அங்கு நிரப்பலாம்’ என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரி களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் உத்தர விட்டுள்ளார்.
இதற்கிடையில், மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் வகையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அலுவலகங்களில் 26-ம் தேதி முதல் நேற்று வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் சுமார் 1 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, மேல்நிலை வகுப்புகளுக்கான செய் முறைத் தேர்வுகள் பிப்ரவரி 1-ம் தேதி தொடங்கும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.
அரசு நடவடிக்கைகள் ஒருபுறம் தீவிரமாக, மறுபுறம் போராட்டமும் தீவிரமாகி வருகிறது. ஜாக்டோ - ஜியோ போராட்டத்துக்கு பல்வேறு சங்கங்கள் ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளன. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் 8 ஆயிரம் பேர் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ள தாக அதன் தலைவர் சீனிவாசன் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு தேர்வுத் துறை பணியாளர் சங்கமும் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட இருப்ப தாக அதன் தலைவர் எம்.குமார், பொதுச் செயலாளர் கே.ராதாகிருஷ் ணன் தெரிவித்தனர். தமிழ்நாடு நீதித்துறை பணியாளர் சங்கம் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.