தடையை மீறி பிளாஸ்டிக் பைகளில் விற்பனை செய்யப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் பிரசாத லட்டு

தடையை மீறி பிளாஸ்டிக் பைகளில் விற்பனை செய்யப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் பிரசாத லட்டு
Updated on
1 min read

ராமேசுவரம் தீவைச் சுற்றிலும் இருக்கும் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பிராந்தியத்தில் பவளப்பாறைகள் அதிகம். இந்தப் பவளைப்பாறைகள் பல அரியவகை உயிரினங்களின் வாழ்விடமாக இருக்கக்கூடியவை.  இவற்றைப் பாதுகாக்க 2009 ஆம் ஆண்டில் அப்போதைய மாவட்ட ஆட்சியர்  இருந்த ஹரிஹரனால் பிளாஸ்டிக் பை மற்றும் கப்புகள் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடத்தில் இருக்கும் கடைகள், உணவு மற்றும் தேநீர் விடுதிகள் போன்றவற்றில் அவ்வப்போது அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு பிளாஸ்டிக் பொருள்களைப் பறிமுதல் செய்து, வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தனர். இதன்மூலம்  ராமேசுவரம் தீவில் உள்ளுர் மக்கள் மலிவு விலைத் துணிப்பைகளைப் பயன்படுத்துவது அதிகரித்தாலும ராமேசுவரத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் பிளாஸ்டிக் பைகள் கொண்டு வருவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை நேற்று அமலுக்கு வந்துள்ளது. அரசின் முடிவுக்கு ஒத்துழைக்காதோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.

இந்நிலையில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் விற்பனை செய்யப்படும் பிரசாத லட்டுகள் செவ்வாய்க்கிழமையும் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு கொடுப்பதைக் கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து ராமேசுவரம் நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ''அரசின் முடிவுக்கு ஒத்துழைப்பு அளிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பல்வேறு குழுக்களை உருவாக்கியுள்ளார். ஒவ்வொரு குழுவிலும் ஒரு வருவாய் அலுவலர், காவல்துறை அதிகாரி, உள்ளாட்சி துறை அதிகாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தக் குழுக்கள் சென்று, தடை அறிவிக்கப்பட்ட தேதிக்குப்பின் பிளாஸ்டிக் பொருட்களை யார், யார் வைத்திருக்கிறார்கள் என்று ஆய்வு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in