

ஜம்மு - காஷ்மீர் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக திமுக சார்பில் ரூ.25 லட்சம் பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு அளிக்கப்படுவதாக அக்கட்சித் தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கின் காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் மாண்டு போயிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடிழந்து, இடப் பெயர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்திருக் கின்றன. பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் மக்களுக்கு ஆதரவு அளித்திடும் நோக்கில் தேசிய நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்திடுமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், பாதிப்புக்கு ஆளாகியிருப்போருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக "பிரதமர் தேசிய நிவாரண நிதி"க்கு ரூ.25 லட்ச ரூபாய் நன்கொடையாக வழங்கப்படுகிறது.
இந்த நன்கொடைக்கான காசோலையினை கழக மாநிலங்களவை உறுப்பினர்கள் வாயிலாக பிரதமர் அவர்களிடம் நேரில் வழங்கப்படும்" என கருணாநிதி தெரிவித்துள்ளார்.