Published : 11 Jan 2019 10:47 AM
Last Updated : 11 Jan 2019 10:47 AM

காங்கிரஸின் ஆதரவு துரதிர்ஷ்டவசமானது; இட ஒதுக்கீடு விவகாரத்தில் சொந்தக் கட்சியையே விமர்சித்த ஜோதிமணி

பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு காங்கிரஸ் அளித்துள்ள ஆதரவு துரதிர்ஷ்டவசமானது என, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி விமர்சித்துள்ளார்.

அரசு வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வி நிறுவன சேர்க்கையில் உயர் சாதி ஏழைகளுக்கு (பொதுப் பிரிவினர்) 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசியல் சாசன (124-வது சட்டத் திருத்த) மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை அன்று நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இம்மம்சோதா மாநிலங்களவையில் நீண்ட விவாதத்திற்குப் பிறகு புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.

இம்மசோதாவுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், மசோதா கொண்டு வரப்பட்ட நேரத்தை மட்டும் கேள்வியெழுப்பிய காங்கிரஸ் அம்மசோதாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்தது.

இந்நிலையில், காங்கிரஸின் இந்த ஆதரவை அக்கட்சியின் செய்தித்தொடர்பாளரான ஜோதிமணி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "உயர் சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆதரித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முடிவு துரதிர்ஷ்டவசமானது. இது நூற்றாண்டு கால ஒடுக்குமுறையைக் கருத்தில் கொண்டு சாதிய அடிப்படையில் மட்டும் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் அரசியல் சாசனத்திற்கு முரணானது.

உயர் சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு என்பது இட ஒதுக்கீடுக் கொள்கையை காலப்போக்கில் நீர்த்துப்போகச் செய்யும் ஆபத்துள்ளது. வருடத்திற்கு 8 லட்சம் வருமானமுள்ளவர்களை ஏழைகளென வரையறுப்பது ஏற்புடையதல்ல. எந்த புள்ளி விவரத்தின் அடிப்படையில் இம்மசோதா உருவாக்கப்பட்டுள்ளது?

உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஏற்கெனவே பொருளாதார அடிப்படியிலான 10% இட ஒதுக்கீடு செல்லாது எனத் திட்டவட்டமாக தீர்ப்பளித்துள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த மசோதா எப்படி நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெறமுடியும்?" என ஜோதிமணி பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x