

தேனாம்பேட்டை உதவி கமிஷனராக முத்தழகு குற்றவாளிகளை கைது செய்யாமல் இருக்க லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்டு பேரம் பேசுவதாக ஆடியோ வெளியான விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி அவர்மீது ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேனாம்பேட்டை காவல் சரகத்தில் ஆட்கடத்தல் விவகாரத்தில் மிகப்பெரிய கும்பல் ஒன்றைப் பிடித்துக் கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைத்தனர். இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட இளைஞரும், தேனாம்பேட்டை உதவி கமிஷனரும் பேசியதாக மூன்று ஆடியோக்கள் வலைதளத்திலும் வாட்ஸ் அப்பிலும் வேகமாகப் பரவியது.
நெல்லையில் பாஸ்கர சேதுபதி என்பவர் மிரட்டப்பட்டு ரூ.32 கோடி பறிப்பு புகார் மீதான வழக்கில் நான்கு பேரை தேனாம்பேட்டை போலீஸார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். அதில் முக்கிய குற்றவாளி அப்போது சிக்காத நிலையில் இந்த உரையாடல் அமைந்திருக்கும்.
குற்றவாளி சுந்தர் என்பவரின் தம்பியும், தேனாம்பேட்டை காவல் உதவி ஆணையர் முத்தழகும் பேசுவதாக 3 ஆடியோக்கள் வெளியானது. அதில் 5 லட்சம் முதல் கட்டமாக தருகிறேன் என்று கூற அது பிஸ்கெட் காசு கான்ஸ்டபிளுக்கு போய் கொடு என்கிற ரீதியில் ஏசி பேசுவதாக இருக்கும்.
இது குறித்து தேனாம்பேட்டை உதவி கமிஷனர் முத்தழகுவிடம் 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் அந்த நேரத்தில் கேட்டபோது “அது தனது குரல் இல்லை 31 வருஷம் சர்வீஸ் செய்தவர் யாராவது போனில் இப்படிப் பேசுவார்களா?, என்னுடைய குரல் எல்லோருக்கும் தெரியும். பெரிய குரல், கணீர் என்று இருக்கும். அதிலிருக்கும் குரலுக்கும் எனக்கும் சம்பந்தமே கிடையாது.
31 வருடம் சர்வீஸ் செய்தவன் இவ்வளவு பெரிய திமிங்கிலத்தைப் பிடித்து உள்ளே போட்டவன் நான், இப்படியா போனில் பேசுவேன். பூ விக்கிற அம்மா கிட்டக்கூட செல்போனில் ரெக்கார்டிங் இருக்கு. அப்படி இருக்கும் போது நான் இப்படியா பேசுவேன். ஆகவே, உண்மை ஒரு நாள் வெளிவரும். சட்டம் தன் கடமையைச் செய்யும்.”என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உதவி கமிஷனர் முத்தழகு மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். பின்னர் கன்னியாகுமரி மாவட்ட சமூக நல உதவி கமிஷனராக மாற்றப்பட்டார். தற்போது ஆவடி பட்டாலியனில் உள்ளார். இந்நிலையில் ஆடியோக்கள் வெளியான அடிப்படையிலும், பத்திரிகை, தொலைக்காட்சி செய்திகள் அடிப்படையிலும் கடந்த ஆண்டு ஜூன் மாதம்லஞ்ச ஒழிப்புத்துறை ஆடியோக்களை கைப்பற்றி விசாரணை நடத்தியது.
இந்நிலையில் உதவி கமிஷனர் முத்தழகு மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் பிரிவு 7rw, ஊழல் தடுப்புச் சட்டம் 13(2) RW, 139(1) (d)-ன் கீழ் கடந்த 8-ம் தேதி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் எஃப.ஐ.ஆர் ஊழல் தடுப்புப்பிரிவு சிறப்பு நீதிபதிக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.