

தயாரிப்பாளர் சங்கம் சார்பில் இளையராஜா வுக்கு பாராட்டு விழா நடத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இதுதொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சினிமா தயாரிப்பாளரான ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஆனால், இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவைக் கூட்டி முடிவு எடுக்கவில்லை. தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளனர். சங்கத்துக்கு ரூ.7.73 கோடி அளவுக்கு முறையான கணக்குகளை முன்னாள் நிர்வாகிகள் காட்டவில்லை. எனவே, தயாரிப்பாளர் சங்கத்துக்கான தேர்தல் மற்றும் பொதுக்குழுவை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடத்த உத்தரவிட வேண்டும். இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்துவதிலும் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது என்பதால் அதற்கு தடை விதிக்கவேண்டும்’ என கோரியிருந்தார்.
நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.