

சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு சென்னையில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. சின்னத்திரை நடிகர்கள் சங்கத்துக்கான தேர்தல் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
இச்சங்கத்தில் 1,700 உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது பொறுப்பில் உள்ள நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து, தேர்தல் நடக்கிறது. இம்முறை நடிகர்கள் சிவன் ஸ்ரீனிவாசன், ரவிவர்மா, நடிகை நிரோஷா, போஸ் வெங்கட் ஆகியோர் தலைமையில் 4 அணிகள் போட்டியிடுகின்றன.
தலைவர், துணைத் தலைவர், செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இயக்குநர்கள் லியாகத் அலிகான், தம்பிதுரை இருவரும் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை விருகம்பாக்கம் ஏஆர்கே திருமண மண்டபத்தில் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முடிந்ததும் இன்று மாலை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.