

சென்னையில் சாலையில் தனியாக நிற்கும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் மீது வழிப்பறி கும்பல் தாக்குதல் நடத்திக் கொள்ளையடிப்பது தொடர்கிறது. கடந்த 22-ம் தேதி தாக்கப்பட்ட கால் டாக்ஸி ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த 22-ம் தேதி சென்னை கொடுங்கையூர் கடும்பாடி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஸ்ரீதர் புழல் அடுத்த இரட்டை ஏரி ஜி.என்.டி. சாலை ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு ஒய்வெடுத்து கொண்டிருந்தபோது முகமூடி அணிந்து வந்த 5 பேர் ஸ்ரீதரிடம் செல்போன் பறிக்க முயன்றனர். செல்போன் கொடுக்க மறுத்ததால் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைச் சரமாரியாக வெட்டினர்.
அவர்களுடன் ஸ்ரீதர் போராடியபோது அவ்வழியாகச் சென்ற யாரும் கண்டுகொள்ளவில்லை. அவரை வெட்டிய கும்பல் அவரிடமிருந்து 45 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போனைப் பிடுங்கிச் சென்றது. தகவலறிந்து வந்த புழல் போலீஸார் டிரைவர் ஸ்ரீதரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஜி.என்.டி. சாலையில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் உள்ள காட்சிகள் மூலம் வழிப்பறிக் கொள்ளையர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில் ஸ்ரீதரைத் தாக்கி வழிப்பறி செய்த வியாசர்பாடியைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்திய போலீஸார் அவர் கொடுத்த தகவலின் பேரில் வியாசர்பாடியைச் சேர்ந்த பாலா, ராஜீவ் மற்றும் 2 சிறுவர்களைக் கைது செய்தனர்.
இந்நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஓட்டுநர் ஸ்ரீதர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்நிலையில் சம்பவம் நடந்த அதே மாதவரம் பகுதியில் நேற்றும் ஒரு கால் டாக்ஸி ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே காருக்குள் தூங்கிக்கொண்டிருந்த கால் டாக்ஸி டிரைவர் மதனை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி செல்போன், 2.5 சவரன் செயினை பறித்துச் சென்றது. இதேபோன்று கொடுங்கையூரில் கார் ஓட்டுநர் செந்தில் குமார் (32) என்பவரை அரிவாளால் வெட்டிய ஒரு கும்பல் செல்போனைப் பறித்துச் சென்றது.
புழல், மாதவரம், கொடுங்கையூர் பகுதியில் சாலையோரங்களில் காரை நிறுத்திவிட்டு தூங்கும் கால் டாக்ஸி டிரைவர்களைத் தாக்கி நடக்கும் கொள்ளை சம்பவங்களால் ஓட்டுநர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. வழிப்பறியில் ஒரு ஓட்டுநர் கொலை செய்யப்பட்டும் போலீஸார் உரிய ரோந்துப் பணி செய்யாததால் அதே மாதவரம் பகுதியில் மீண்டும் ஒரு ஓட்டுநர் வெட்டப்பட்ட சம்பவமும் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.