Published : 27 Apr 2014 01:47 PM
Last Updated : 27 Apr 2014 01:47 PM

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தவிப்பு: அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதி

கொடைக்கானலில் குளுகுளு சீசனை அனுபவிக்கவரும் உள் நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குடிக்க தண்ணீர் இல்லாமலும், வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி இல்லாமலும் பல சிரமங்களை சரமங்களை சந்திக்கவேண்டிய நிலை உருவாகியுள்ளது.

தமிழகத்தில் கத்திரி வெயில் ருத்ர தாண்டவம் ஆடிவருகிறது. இந்தச் சூழலில், கொடைக்கானலில் பகலில் மிதமான வெயிலும், காலை மாலை நேரத்தில் இதமான சாரலுடன் கூடிய குளுகுளு சீசனும் தொடங்கியுள்ளன. இந்த சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வாகனங் களில் படையெடுத்து வருகின்றனர்.

பிரையண்ட் பூங்காவில் தற்போது கோடை மலர் கண்காட்சிக்காக பூத்துக் குலுங்கும் டேலியா, ஆப்ரிக்கன் மேரி கோல்ட், டைசி, ஆண்ட்ரியம், ஸ்வீட் வில்லியம்ஸ், பேன்சி வகை வண்ண வண்ண மலர்களைப் பார்த்து ரசிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

மனதை மயக்கும் மேகக்கூட்டம்

கொடைக்கானல் ஏரியில், படகு சவாரி செய்யவரும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் பலமடங்கு அதிகரித்துள்ளது. கொடைக் கானலில் மாலை நேரத்தில் மனதை மயக்கும் மேகக்கூட்டங்கள், கொடைக்கானல் மலைகளில், மரங்களில் தரையிறங்கிச் செல்வது கண்களுக்கு விருந்து படைப்பவையாக உள்ளன.

வியாபாரிகள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா இடங்களான கோக்கர் வாக்ஸ், பசுமைப் பள்ளத்தாக்கு, வெண்பஞ்சு மேகங்கள் தொட்டு விளையாடும் தூண்பாறை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுலா தொழில் விறுவிறுப்படைந்துள்ளதால், சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் கொடைக்கானல் ஹோட்டல்கள், விடுதிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதனால், தங்கும் விடுதிகளின் வாடகையும் அதிகரித்துள்ளது. சுற்றுலா வாடகைக் கார்கள் பெர்மிட் இல்லாமல் வரைமுறையில்லாமல் இயக்கப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகள் வருகையை குறிவைத்து கார் வாடகையை இரட்டிப்பு மடங்கு உயர்த்தியுள்ளனர்.

போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா நகராக விளங்கினாலும், சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நகரில் ஏற்படுத்தப்படவில்லை. தற்போது ஒரே நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வருவதால் நகரின் முக்கியச் சாலைகளில் திரும்பிய திசையெல்லாம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வாகனங்கள் நிறுத்த இடமில்லாமல் சுற்றுலாப் பயணிகள் சாலையோரங்களில் நிறுத்திச் செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்துசெல்லும் பகுதியில் வாகன பார்க்கிங் வசதி அமைக்க நகராட்சி மற்றும் சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. நெடுந்தொலைவில் இருந்துவரும் சுற்றுலாப் பயணிகள், வந்ததும் காலைக் கடன்களை முடிக்க போதுமான கட்டணம் மற்றும் இலவசக் கழிப்பிட வசதியில்லாமல் பரிதவிக்கின்றனர்.

கடும் குடிநீர் தட்டுப்பாடு

தற்போது கொடைக்கானலில் வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், சுற்றுலா பயணிகள் குடிக்க தண்ணீர் இல்லாமல் விலை கொடுத்தே வாங்கிக் கொடுக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. அதனால், பாதுகாப்பு இல்லாத போலி குடிநீர் விற்பனை அதிகரித்துள்ளது. கொடைக்கானல் நகரில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகளின் கூட்டம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x