

சேத்துப்பட்டு மேம்பாலத்தில் வேகமாக சென்ற இளைஞர் ஓட்டிய பைக் கட்டுப்பாட்டை இழந்ததால் மின் கம்பத்தில் மோதியதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய இளைஞரும் பின்னால் உட்கார்ந்து வந்த நண்பனும் பலியாகினர்.
சென்னை கீழ்ப்பாக்கம் புல்லாபுரம் 5-வது தெருவில் வசிப்பவர் உதயகுமார். சென்னை மாநகராட்சி ஊழியராக உள்ளார். இவரது மகன் அபிஷேக் (19). அருகிலுள்ள கேக் விற்பனை மையத்தில் பணியாற்றி வந்தார். அபிஷேக்கின் நண்பர் ஆகாஷ்(19). அதே பகுதியில் வசிக்கும் ஆகாஷும் கேக் கேக் விற்பனை மையத்தில் பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு உறவினர்களுக்கு பிரியாணி வாங்குவதற்காக இருவரும் நுங்கம்பாக்கம் செல்ல முடிவு செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளுக்காக தனது மாமாவின் அதிவேக மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு பிரியாணி வாங்கச் சென்றனர்.
அந்த மோட்டார் சைக்கிளை அபிஷேக் இதுவரை ஓட்டாததால் அதன் வேகம் இருவருக்கும் சந்தோஷமாக இருந்துள்ளது. இருவரும் மோட்டார் பைக்கில் சேத்துப்பட்டில் இருந்து நுங்கம்பாக்கம் நோக்கி சென்றனர். இருவரும் ஹெல்மட் அணியவில்லை. சேத்துப்பட்டு மேம்பாலத்தில் வேகமாக சென்ற போது பைக் அபிஷேக்கின் கட்டுப்பாட்டை இழந்து இடது புறத்தில் இருந்த மின்கம்பத்தில் வேகமாக மோதியது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பின்னால் உட்கார்ந்திருந்த ஆகாஷ் தூக்கி வீசப்பட்டு தரையில் போய் வேகமாக விழுந்ததில் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். அபிஷேக் மின்கம்பத்தில் மோதிய வேகத்தில் கம்பத்தில் அவரது கழுத்து குத்தி கிழித்ததில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட ஆகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் சம்பவ இடத்திற்கு அபிஷேக் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதிவேக மோட்டார் சைக்கிளை பயிற்சி இல்லாமல் இயக்கியதும், இளம் வயதினருக்கு மோட்டார் சைக்கிள் குறித்த அறியாமல் மோட்டார் சைக்கிளை கொடுத்ததும், ஹெல்மட் அணியாமல் அதி வேகமாக மோட்டார் சைக்கிளை இயக்கியதும் விபத்துக்கு காரணம் என போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.