Published : 30 Jan 2019 01:35 PM
Last Updated : 30 Jan 2019 01:35 PM

அனைவருக்கும் அடிப்படை வருமானம்:  ராகுல் காந்தியின் அறிவிப்பு ஏழை மக்களின் வயிற்றில் பால் வார்த்துள்ளது; திருமாவளவன் பாராட்டு

அனைவருக்கும் அடிப்படை வருமானம் என்ற ராகுல் காந்தியின் அறிவிப்பு, ஏழை மக்களின் வயிற்றில் பால் வார்த்துள்ளது என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தொல்.திருமாவளவன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் குடிமக்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானத்தை அளிப்போம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். கடந்த ஐந்து ஆண்டு காலமாக நடந்துவரும் கார்ப்பரேட் ஆட்சியில் ஏழை, எளிய மக்கள் அல்லலுற்று வருகின்றனர். அவர்களது வயிற்றில் பால்வார்க்கும் விதமாக ராகுல் காந்தியின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. அதற்காக அவரைப் பாராட்டுகிறோம் .

அனைவருக்கும் அடிப்படை வருமானம் என்ற திட்டம் ஏற்கெனவே பின்லாந்து, இத்தாலி முதலான நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இந்தியாவின் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியம் இதுகுறித்து ஆய்வு செய்து விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

குடும்பமொன்றுக்கு மாதம் தோறும் ஆயிரத்து ஐநூறு ரூபாயை வழங்குவதற்கான திட்டமொன்றைத் தயாரித்து அளித்துள்ளார். இந்தத் திட்டம் நடைமுறையில் சாத்தியம் தான் என்பதற்கு பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியத்தின் அறிக்கையே ஆதாரமாகும்.

'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடிமக்கள் ஒவ்வொருவரது வங்கி கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போடுவோம்' என 2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தது போல பொய் அறிவிப்பு அல்ல ராகுல் காந்தியின் அறிவிப்பு. அது நேரு காலம் முதல் ஏழை, எளிய மக்களின் பால் காங்கிரஸ் கட்சி கொண்டுள்ள அக்கறையின் வெளிப்பாடு.

100 நாள் வேலை திட்டத்தை உருவாக்கி கிராமப்புற வறுமையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்த காங்கிரஸ் கட்சி இப்போது நாட்டின் வளத்தில் அனைத்து குடிமக்களுக்கும் பங்கு இருக்கிறது என்ற உண்மையை வலியுறுத்தும் விதமாக இந்த அறிவிப்பைச்  செய்திருக்கிறது.

இதுவரை விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தான் பொதுவாக முன்வைக்கப்பட்டு வந்தது. அப்படி கடன் தள்ளுபடி செய்யும் போது அதனால் நிலமற்ற கூலி விவசாயிகள் எந்தப் பயனையும் அடைய முடியவில்லை. விவசாய வேலை நாட்கள் குறைந்து கொண்டே வருவதால், விவசாயம் செய்யப்படாத காலத்தில் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்தி வந்தோம்.

இதுதொடர்பாக தமிழக முதல்வரை சந்தித்து இரண்டு முறை கோரிக்கை மனுவும் அளித்திருக்கிறோம். இந்நிலையில் ராகுல் காந்தி அவர்களின் அறிவிப்பு எங்களது கோரிக்கையை அனைத்து மக்களுக்கும் விரிவுபடுத்துவதாக  உள்ளது.

ராகுல் காந்தியின் இந்த அறிவிப்பால் நிலைகுலைந்து போயிருக்கும் மோடி அரசு மீண்டும் அயோத்தி பிரச்சினையை கிளப்பி நாட்டை மதத்தின் அடிப்படையில் கூறுபோட்டு வாக்கு வாங்க முயற்சிக்கிறது. பாபர் மசூதி இருந்த இடத்தைச் சுற்றி இருந்த 67 ஏக்கர் நிலத்தை 1993-ல் மத்திய அரசு கையகப்படுத்தியிருந்தது. அந்த நிலத்தை திருப்பித் தருவதற்காக அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் இப்போது மனு செய்திருக்கிறது. 

நாட்டில் ரத்தக்களறியை ஏற்படுத்த நினைக்கும் பாஜகவின் தீய நோக்கம் நிறைவேறாமல் தடுக்கவும், ஏழை எளிய மக்களுக்கு ஆதரவான மதச்சார்பற்ற அரசு காங்கிரஸ் தலைமையில் அமையவும் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அறைகூவி அழைக்கிறோம்" என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x