Published : 31 Jan 2019 14:27 pm

Updated : 31 Jan 2019 14:27 pm

 

Published : 31 Jan 2019 02:27 PM
Last Updated : 31 Jan 2019 02:27 PM

அண்ணா காட்டிய வழியில் நெடும்பயணத்தை அயராது தொடர்வோம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

அண்ணா காட்டிய வழியில் நெடும்பயணத்தை அயராது தொடர வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், "தமிழினம் கண்ட தனிப்பெருந்தலைவர், தாய்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய தகைமையாளர், இனம் - மொழி காக்கும் அறப்போரில் இணையில்லா வெற்றி பெற்ற இன்ப சூரியன், காஞ்சித் தலைவன், தென்னாட்டு காந்தி, இந்நாட்டு இங்கர்சால் எனப் புகழும் பெருமைகளும் பல கொண்ட அறிஞர்க்கெல்லாம் அறிஞர், அண்ணா இந்த மண்ணைவிட்டு மறைந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.

திமுக எனும் மாபெரும் மக்கள் - அரசியல் இயக்கத்தை உருவாக்கி, அகில இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தையும் எதிர்கொண்டு, தன் உழைப்பாலும், உயர்வான ஆளுமையாலும், கரைகண்ட கல்வித்திறனாலும், தொண்டர்களின் தளரா ஊக்கத்தாலும் பதினெட்டே ஆண்டுகளில் மக்களின் பேராதரவுடன், ஆட்சியைப் பிடித்து முதல்வரானவர் அண்ணா.

ஒன்றே முக்கால் ஆண்டுக் காலம்தான் அவர் ஆட்சி செலுத்தினார். அதற்குள் இயற்கை அண்ணாவின் உயிரை அவசரமாகப் பறித்துக் கொண்டோடிவிட்டது. ஒட்டுமொத்த தமிழகமும் தன் தவப்புதல்வனை இழந்த வேதனையில் கண்ணீர் வடிக்க, உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு லட்சக்கணக்கானோர் திரண்ட இறுதி ஊர்வலத்தின் மக்கள் வெள்ளத்தில் மிதந்து சென்று வங்கக் கடலோரம் மீளாத்துயில் கொண்டிருக்கும் அண்ணாவை இழந்து அரை நூற்றாண்டு கடந்து விட்டது.

அந்த ஆருயிர் அண்ணா உருவாக்கிய கட்சியை – ஆட்சியை - லட்சியங்களை இந்த அரை நூற்றாண்டு காலமும் தன் நெஞ்சிலும் தோளிலும் சுமந்து நெருப்பாறுகளை நீந்திக் கடந்தவர், நம் உயிர் நிகர் தலைவர் கருணாநிதி. அண்ணாவின் பாசமிகு தம்பியாக இயக்கம் வளர்த்து, கோடிக்கணக்கான உடன்பிறப்புகளைப் பெற்ற தலைவர் 95 வயது வரையிலும் தமிழ்ச் சமுதாயத்திற்காக சந்தனம் போல தன்னைத் தேய்த்துக் கொண்டவர். ஓய்வறியா அந்தச் சூரியன் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி வானத்திலிருந்து மறைந்துவிட்டது; மறைந்த பின்னரும் வாழ்வதைப்போலவே நமது மனங்களில் நிறைந்துவிட்டது.

அண்ணா மறைந்தபோது, தலைவர் கருணாநிதி படைத்த இரங்கல் இலக்கியத்தின் இறுதியில்

நீ இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்

இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா

நான் வரும்போது கையோடு கொணர்ந்து அதை

உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா

- என எப்போதும் போல் சொன்ன சொல் தவறாமல் தன் அண்ணனிடம் இரவலாக வாங்கிய இதயத்தைப் பத்திரமாக ஒப்படைத்த அன்புத் தம்பியாக அவர் அருகிலேயே துயில் கொள்கிறார் தலைவர் கருணாநிதி.

இரு பெரும் தலைவர்கள் இன்று நம்மிடையே இல்லை; ஆனால், இல்லை என்ற எண்ணம் நெஞ்சில் இல்லை. ஏனெனில், உள்ளம் எல்லாம் அவர்களே நிறைந்திருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். அண்ணாவின் இதயத்தை தலைவர் கருணாநிதி இரவலாகக் கேட்டதுபோல, தலைவர் கருணாநிதியின் சக்தியில் பாதியைத் தரும்படி அவர் இருக்கும்போதே நான் கோரிக்கை வைத்தேன். தலைவர் கருணாநிதியின் அன்பு வாழ்த்துகளோடும் அனுமதியோடும் அந்த சக்தியைப் பெற்றிருக்கிறேன்.

உங்களில் ஒருவனான எனக்குக் கிடைத்துள்ள அந்த சக்தி, இந்தப் பேரியக்கத்தை இருபெரும் தலைவர்களின் லட்சிய நோக்கத்துடன் வழிநடத்திடும் ஆற்றலாக அமைந்துள்ளது. நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில், 'நான் திராவிட இனவழி வந்தவன்' என முழங்கி, திராவிட இனத்தின் பெருமையையும் தமிழ் மொழிக்கான உரிமையையும் நேருவே வியக்கும் வண்ணம் எடுத்துரைத்தவர் அண்ணா. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றி, இந்திய ஒன்றியம் திரும்பிப் பார்க்கும்படி செய்தவர் தலைவர் கருணாநிதி. அந்த இருபெரும் தலைவர்களின் இணையிலாப் பணி இன்றைய நிலையில் அதிக அளவில் தேவைப்படுகிறது.

மாநில உரிமைகளைப் பறித்திடும் மனிதாபிமானமற்ற ஒரு கொடுங்கோல் ஆட்சி மத்தியிலே நடைபெற்று வருகிறது. அதனை எதிர்த்துக் குரல் கொடுக்க முடியாத எடுபிடிகளாக, கொத்தடிமைகளாக மாநிலத்தை ஆள்பவர்கள் மண்டியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். கொடுங்கோண்மை ஒழியவும், கொத்தடிமைத்தனம் அழியவும், அதற்குரிய வலிமை கொண்ட இயக்கம், அண்ணா உருவாக்கிய - தலைவர் கருணாநிதி தொடர்ந்து வழிநடத்திய திமுக.

நாம் எதிர்கொள்ள வேண்டிய அறப்போர்க் களங்கள் ஏராளமாக இருக்கின்றன. சமூக நீதியை குழி தோண்டிப் புதைக்கும் 10% பொருளாதார இட ஒதுக்கீடு, தமிழ் உள்ளிட்ட மொழிகளை அழிக்க இந்தி - சமஸ்கிருதத் திணிப்பு, அனிதா-பிரதீபா ஆகியோரின் உயிரைப் பறித்து மாணவர்களின் எதிர்காலத்தைச் சிதைத்த நீட் தேர்வு, வேளாண்மை மண்டலமாக அறிவிக்கக் கோரிய காவிரி டெல்டாவை ஹைட்ரோகார்பன் மண்டலமாக்கி விவசாயிகளின் வாழ்வுரிமை பறிப்பு, ஜிஎஸ்டி வரி மூலம் வணிகர்களின் வயிற்றில் அடிப்பு, பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் நாட்டு மக்களை ஒட்டுமொத்தமாக நள்ளிரவில் நடுத்தெருவில் நிறுத்தியது என மத்தியில் ஆளுகின்ற மோடி தலைமையிலான பாசிச பாஜக அரசின் கொடுங்கோண்மைக்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன.

அந்தக் கொடுங்கோல் அரசுக்கு கொத்தடிமையாகி குனிந்து தரையைக்கவ்விச் சேவகம் செய்யும் எடப்பாடி பழனிசாமி அரசு, தன் எஜமானர் காலால் இடும் கட்டளைகளைத் தலையில் தாங்கி செயல்படுத்துகிறது. தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு, 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நலன் புறக்கணிப்பு, உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் அடிப்படை ஜனநாயகத்திற்கு குழிபறிப்பு, தலைநகரம் தொடங்கி குக்கிராமம் வரை கலெக்‌ஷன் – கரப்ஷன் - கமிஷன் எனக் கொள்ளையோ கொள்ளை, ஊழலோ ஊழல், லஞ்சமோ லஞ்சம், ஜெயலலிதா வாழ்ந்த கோடநாட்டில் மர்மக் கொலைகள் என அத்தனை விதமான கிரிமினல் குற்றங்களையும் அனுதினமும் செய்து வருகிறது மைனாரிட்டி எடப்பாடி பழனிசாமி அரசு. இரண்டு ஆட்சிகளையும் அகற்றினால்தான் தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் விடிவுகாலம் பிறக்கும். உதயசூரியனால்தான் விடியல் வெளிச்சம் கிடைக்கும்.

தலைவர் கருணாநிதியின் உடன்பிறப்புகளான நீங்கள் ஒவ்வொருவரும், அண்ணா வகுத்து தந்த கடமை – கண்ணியம் - கட்டுப்பாடு இந்த மூன்றையும் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகும். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு தலைவர் கருணாநிதி நமக்கு வகுத்தளித்த ஐம்பெரும் முழக்கங்களான

அண்ணா வழியில் அயராது உழைப்போம்!

ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்!

இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!

வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்!

மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி!

இந்த ஐந்தையும் உள்ளத்தில் ஏந்தி உரக்க ஒலித்து, அதனை நிறைவேற்ற உற்சாகத்துடன் செயலாற்றுவோம்.

வங்கக் கடலோரம் துயில் கொள்ளும் தங்கத் தலைவர்கள் இருவரும் நமக்கு கலங்கரை விளக்குகளாக வழிகாட்டுகிறார்கள். அவர்களின் அடியொற்றி நடந்திடவும் அடுத்த கட்டப் பயணத்தைத் தொடர்ந்திடவும் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஈரோட்டில் நடந்த திமுக மாநாட்டில் புதிய முழக்கங்களை முன்வைத்தேன்.

கலைஞரின் கட்டளையைக் கண்போல் காப்போம்!

தமிழரை வளர்த்து தமிழைப் போற்றுவோம்!

அதிகாரக் குவியலை அடித்து நொறுக்குவோம்!

மதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம்!

வளமான தமிழகத்தை வளர்த்து எடுப்போம்!

அண்ணாவும் தலைவர் கருணாநிதியும் வகுத்து தந்த லட்சியங்களுடன் இந்த 5 முழக்கங்களையும் நெஞ்சில் நிறுத்தி, நெடும் பயணத்தைத் தொடர்ந்திடுவோம்.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 3 ஆம் நாள் அண்ணாவின் நினைவு நாளையொட்டி கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு அமைதிப் பேரணியாகச் சென்று மலரஞ்சலி செலுத்துவதைப் பெருங்கடமையாகக் கடைப்பிடித்தவர் தலைவர் கருணாநிதி. அவர் வகுத்துத் தந்த வழியில், அண்ணாவின் 50 ஆம் ஆண்டு நினைவு நாளில், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையிலிருந்து அண்ணா நினைவிடம் வரையிலான அமைதிப் பேரணியில் அலை அலையாகப் பங்கேற்போம்.

கடற்கரையில் துயில்கின்ற இருபெரும் தலைவர்களையும் இதயத்தில் ஏந்தி, அவர்கள் காட்டிய வழியில் நெடும்பயணத்தை அயராது தொடர்வோம்! லட்சியப் பாதையில் எப்போதும் வெற்றியை ஈட்டுவோம்" என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

    திமுக மு.க.ஸ்டாலின்அண்ணா கருணாநிதி பாஜக DMK MK stalinAnnaduraiKarunanidhiBJP

    Sign up to receive our newsletter in your inbox every day!

    You May Like

    More From This Category

    More From this Author