Published : 02 Jan 2019 11:07 AM
Last Updated : 02 Jan 2019 11:07 AM

ஜெயலலிதா மரணம்; தேவைப்பட்டால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடலாம்: தமிமுன் அன்சாரி கருத்து

ஜெயலலிதா மரணம் தொடர்பாக தேவைப்பட்டால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடலாம் என எம்எல்ஏ தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.

நாகையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கஜா புயலின் தாக்கத்தால் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இழந்த பசுமையை 10 ஆண்டுகளில் மீட்க, பசுமை மீட்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின்கீழ் புயல் பாதித்த மாவட்டங்களில் 5 லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.

திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கையில் நடந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நிர்வாகக் குழு கூட்டத்தில், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் எந்த கூட்டணிக்கும், எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போதும் இதே போன்ற முடிவைதான் எடுத்தோம்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பேட்டி அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. அவரது பேட்டியை கேட்டவர்களுக்கு, ஜெயலலிதாவின் மரணத்தில் ஏதோ நடந்திருக்கிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, அரசு இப்பிரச்சினை குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும். தேவைப்பட்டால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடலாம். உண்மை கண்டறியப்பட வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x