

மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி அரசியல் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய அரசின் திட்டங்களை பட்டியலிட்டதுடன் பேச்சை முடித்ததால் பாஜகவினர் ஏமாற்றம் அடைந்தனர்.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இரு கட்சித் தலைவர்களும் நட்பு பாராட்டி வருகின்றனர். இந்த சூழலில் அதிமுக எம்.பி.யும், மக்களவைத் துணைத் தலைவருமான தம்பிதுரை, பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார். இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜகவினர் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து, தம்பிதுரையின் பேச்சு அவரது சொந்த கருத்து, அதிமுகவின் கருத்து இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்ற பாஜக பொதுக்கூட்டம் மதுரையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் அரசியல் பேசுவார், எந்தக் கட்சிகளுடன் கூட்டணி என்பதை வெளிப்படுத்துவார் என பாஜகவினர் காத்திருந்தனர். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போனது.
கூட்டத்தில் பிரதமர் பேசும்போது, மத்திய அரசின் திட்டங்களைப் பட்டியலிட்டார். இறுதியில் ஊழலுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுத்து வருவதால் தனக்கு எதிராக ஊழல்வாதிகள் கூட்டு சேர்ந்து செயல்படுவதாகவும், அதற்கு அஞ்சாமல் தான் எப்போதும் ஏழைகளின் பக்கம் நிற்பதாகவும் குறிப்பிட்டார். திமுக உள்ளிட்ட எந்த கட்சிகளைப் பற்றியும் பேசவில்லை. எதிர்க்கட்சிகள் என்று கூட சொல்லாமல், எதிர்மறை சிந்தனையுள்ளவர்கள் என்று கூறியதோடு நிறுத்திக்கொண்டார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மட்டும், ‘உச்சி சூரியனே எங்களை ஒன்றும் செய்யாதபோது, உதய சூரியன் என்ன செய்துவிடப்போகிறது?’ என திமுகவை நேரடியாக தாக்கிப் பேசினார். பாஜக நிர்வாகி மகா சுசீந்திரன் பேசும்போது, ‘தமிழகத்தில் கழகங்கள் இல்லாத ஆட்சி மலர வேண்டும்’ என்ற பாஜகவின் பழைய கோஷத்தை நினைவுபடுத்தினார். பொதுக்கூட்ட மேடைக்கு பிரதமர் வருவதற்கு முன் பேசிய பாஜக நிர்வாகிகளும் மத்திய அரசின் திட்டங்களை மட்டுமே பட்டியலிட்டனர்.
இதன் காரணமாக பெரும் எதிர் பார்ப்புடன் கவனிக்கப்பட்ட மதுரை பாஜக பொதுக்கூட்டம், அரசியல் கூட்ட மாக இல்லாமல் சாதனை விளக்கப் பொதுக் கூட்டமாக நடந்து முடிந்தது.
இது குறித்து பாஜக தொண்டர்கள் சிலர் கூறுகையில், "மதுரை பொதுக்கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு, பிரச்சாரத்தை பிரதமர் தொடங்குவார் என எதிர்பார்த்தோம். பிரதமர் அரசியல் பேசாதது ஏமாற்றம் அளிக்கிறது" என்றனர்.
மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் சசிராமன் கூறியதாவது: தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. கூட்டணி முடிவாகவில்லை. எதிர்க்கட்சிகளின் கூட்டணி இறுதியாகவில்லை. இதனால் பிரதமர் அரசியல் பேசவில்லை. எனினும், அரசின் திட்டங்களை பட்டியலிட்டதே தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதிதான் என்றார்.
அக்கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மகா சுசீந்திரன் கூறுகையில், அரசியல் பேசும் திட்டத்துடன் தான் மதுரைக்கு பிரதமர் மோடி வந்தார். இந்த நிகழ்வு முடிந்ததும் கொச்சிக்கு செல்ல வேண்டியது இருந்தது. இதனால் நேரம் குறைவாக இருந்ததால் சாதனை திட்டங்களை மட்டும் சொல்லிவிட்டுச் சென்றார் என்றார்.