Published : 23 Jan 2019 09:28 PM
Last Updated : 23 Jan 2019 09:28 PM

முதல்வருக்கு எதிராக பேட்டி அளிக்கக்கூடாது: மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு உயர் நீதிமன்றம் தடை

தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேலுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மான நஷ்ட வழக்கில் மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேர் முதல்வருக்கு எதிராக பேசவோ, பேட்டி அளிக்கவோ, ஊடகங்கள் அதை ஒளிபரப்பவோ தடைவிதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு நுழைந்த மர்ம கும்பல் அங்கிருந்த காவலாளியைக் கொலை செய்து விட்டு கொள்ளையில் ஈடுபட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் சயன், மனோஜ் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சயன் மற்றும் மனோஜ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். பின்னர் இதில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் பலியானார், சயானின் மனைவி குழந்தைகளும் விபத்தில் பலியானார்கள்.

இந்த நிலையில் கொடநாடு சம்பவம் தொடர்பாக தெஹல்கா பத்திரிகையின் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆவணப்படம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார். அந்த ஆவணப்படத்தில்  சயான் மற்றும் மனோஜ் சில கருத்துகளைத் தெரிவித்தனர். முதல்வர் எடப்பாடிக்கு தொடர்பிருப்பதாக கனகராஜ் கூறியதாக சயான் மற்றும் மனோஜ் பேட்டி அளித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று சென்னை வந்த மேத்யூஸ், சயான், மனோஜ் மீது தொடர்ந்ததுபோல் தன்மீதும் வழக்கு தொடரப்படும், அதை சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். இவ்விவகாரத்தை சட்டப்படி நீதிமன்றத்திலும் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் மீது  எடப்பாடி பழனிசாமி ரூ.1 கோடியே 10 லட்சம் கேட்டு, உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது வழக்கறிஞர்கள் அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி கல்யாணசுந்தரம் முன் முறையீடு செய்தனர்.

கடந்த 2017-ம் ஆண்டு கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக தெஹல்கா இணையதளத்தின் முன்னாள் ஆசிரியர் வெளியிட்ட ஆவணப்படத்தில் முதல்வருக்கும் அந்த கொள்ளை நிகழ்வுக்கும் தொடர்புள்ளது என்றும், அவரது தூண்டுதலால் கொலைகள் நடைபெற்றதாக கூறப்பட்டிருந்ததாகவும் இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள்.

முதல்வர் என்கிற முறையில் தனது கட்சிக்காரரை தொடர்புப்படுத்த சிலர் முயல்வதாகவும் தேர்தல் நேரத்தில் என்மீது தொடர்ந்துள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது, போலியானது முதல்வரது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கக்கூடியவை என்பதால் இந்த நடவடிக்கைக்கு தடைவிதிக்க வேண்டும்.

இதுபோன்ற விவகாரத்தில் ஈடுபட்ட தெஹல்கா சாமுவேல், சயான், மனோஜ் உள்ளிட்ட 7 பேர் ரூ.1 கோடியே 10 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி கல்யாண சுந்தரம்,  ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் இல்லாமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்த எந்த குற்றச்சட்டுக்களையோ, பேட்டியையோ, ஆவணங்களையோ மேத்யூ சாமுவேல், ஜிபின் பொலியன் குடான், சிஜியா அனில், ஷிவானி, ராதாகிருஷ்ணன், சயன், வயலார் மனோஜ் ஆகியோர் வெளியிடக்கூடாது. அவருக்கு எதிராக அவர்கள் பேசவும் தடை விதிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

இதை 7 பேரும் கடைபிடிக்கவேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி கல்யாணசுந்தரம் மனுதொடர்பாக வரும் 30-ம் தேதி மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேரும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடியின் வழக்கறிஞர் இன்பதுரையின் பேட்டி:

“முதல்வருக்கு எதிரான மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேர் பேட்டிகளை, செய்திகளை பத்திரிகைகள், ஊடகங்கள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 7 பேரும் பேட்டி அளிக்கவோ, பேசவோ தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவற்றை அச்சு ஊடகம், காட்சி ஊடகம் முலமாகவோ, எவ்விதத்திலும் வெளியிட நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. மீறி யாரேனும் பேட்டியை ஒளிபரப்பினாலோ, அல்லது அவர்கள் பேசினாலோ அது நீதிமன்ற அவமதிப்பாகும். ”

இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x