Last Updated : 08 Jan, 2019 10:36 AM

 

Published : 08 Jan 2019 10:36 AM
Last Updated : 08 Jan 2019 10:36 AM

குப்பைத் தொட்டிக்கு ‘குட்பை’- உரம், எரிபொருளாக குப்பையை மாற்றும் பொள்ளாச்சி நகராட்சி!

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு விதித்துள்ள தடை அறிவிப்பு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இளைய தலைமுறையினர், இல்லத்தரசிகள் என பலதரப்பினருடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. `மஞ்சள் பை` குறித்த விழிப்புணர்வு மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில்  பரவி வருகின்றன.

இயற்கையை விட்டு விலகிய மனிதன், தனது தேவைக்காகவும், வசதிக்காகவும் கண்டுபிடித்த பல கண்டுபிடிப்புகள், சுற்றுச்சூழலை விஷமாக்கி, எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகின்றன. பாத்திரங்களையும், துணிப் பைகளையும் எடுத்துக்கொண்டு கடைகளுக்கு பொருட்கள் வாங்கச்  சென்ற மக்களுக்கு, பாலித்தீன் பயன்பாடு எளிதாக இருந்தது. ஆனால், பயன்படுத்தப்பட்ட பாலிதீன்கள் மண்ணில் புதைந்து, அழிக்கவே முடியாதவையாக மாறி, மண்ணை மலடாக்கி வருகின்றன.

பாலித்தீன் கழிவுகள் மண் அடுக்குகளில் போர்வைபோல தடுப்பை ஏற்படுத்திக் கொள்வதால்,  மழைநீர் பூமிக்குள் நுழையமுடியவில்லை. இதனால்,  நிலத்தடி நீர்மட்டம் குறையத் தொடங்கியது.  இதனால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்த தமிழக அரசு, அண்மையில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்துள்ளது.

கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் விற்பனைக்கு வைத்திருந்த பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள், உணவுப் பொட்டலங்கள் கட்டப்  பயன்படுத்தும் பாலித்தீன் தாள்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தாள்கள், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய குவளைகள் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாற்றுப் பொருட்கள்

இதற்குப் பதிலாக பாக்குமட்டை தட்டுகள், துணி, காகிதம், சணலால் தயாரிக்கப்பட்ட பைகள் உள்ளிட்ட 12 வகையான மாற்றுப் பொருட்களை பயன்படுத்திக்  கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கடைகள், உணவு விடுதிகள், வர்த்தக நிறுவனங்களில்  சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தும் பணியிலும் உள்ளாட்சி அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், சப்தமில்லாமல் மற்றொரு சாதனையைச் செய்து வருகிறது பொள்ளாச்சி நகராட்சி. மக்காத குப்பையை சிமென்ட் ஆலைகளுக்கு எரிபொருளாகவும், மக்கும் குப்பையை விவசாயிகளுக்கு இயற்கை உரமாகவும் தயாரித்துக்  கொடுத்து வருகிறது. இதன் மூலம் நகராட்சிக்கு லட்சக்கணக்கில் வருவாயும் கிடைக்கிறது.

பொள்ளாச்சியில் பாதாள சாக்கடைத்  திட்டம், நெடுஞ்சாலைகள்  விரிவாக்கம், உடுமலை- பொள்ளாச்சி- கோவை நான்கு வழிச்சாலைப் பணிகள்,  புறவழிச் சாலைப் பணிகள், குடிநீர்த் திட்டம் விரிவாக்கம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்  மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

43 டன் குப்பை

இதேபோல, பொள்ளாச்சி  நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, முன்மாதிரி நகராட்சியாக மாறிவருகிறது.  ஏறத்தாழ 13.87 சதுர கிலோமீட்டர் பரப்பில் 36 வார்டுகள், சுமார் ஒரு லட்சம் மக்கள் தொகையுடன்,  வடுகப்பாளையம், டி.கோட்டம்பட்டி  கிராமப் பகுதிகளையும்  கொண்ட பொள்ளாச்சி நகரில் தினமும் 43  டன் குப்பை சேகரமாகின்றன. இதில் 5  டன் குப்பையை பெரிய தனியார் நிறுவனங்கள் கையாள்கின்றன. மீதமுள்ள  38 டன் குப்பையை தினமும் சேகரித்து,  தரம் பிரிக்கும் பணியில், 6 சுகாதார ஆய்வாளர்கள், 8 மேற்பார்வையாளர்கள் ,  100  துப்புரவுப்  பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். காலை 8 மணிக்குத் தொடங்கும்  தூய்மைப் பணி,  மதியம் ஒரு மணி வரை நடைபெறுகிறது.

பொதுவாக, தமிழகத்தில் மாநகராட்சி முதல் கிராம ஊராட்சி வரையிலான உள்ளாட்சி அமைப்புகள் சந்திக்கும் பெரும் சவால்களில் முக்கியமானது குப்பையை அகற்றுதல். நகரங்களில்  நீர்நிலைகளிலும்,  கிராமங்களில் ஒதுக்குப்புறமான பகுதிகளிலும் மலைமலையாகக் குவிக்கப்படும் குப்பையை அகற்ற,  திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை அரசு கொண்டுவந்தது. எனினும், பல இடங்களில் இந்த திட்டத்தை சரியாக நிர்வகிக்க முடியாமல் உள்ளாட்சி அமைப்புகள் திணறிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், பொள்ளாச்சி நகராட்சி தினமும் 43 டன் குப்பையைக்  கையாண்டு, அவற்றில் பிளாஸ்டிக் குப்பையை  முழுவதுமாக  மறுசுழற்சி செய்து, புதிய  நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளாக குப்பை  குவிந்து, செயற்கை மலைபோலக் காட்சியளித்த பகுதி, தற்போது உரத்  தொழிற்சாலையாக மாறி வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளாக நல்லூர் கிராமத்தில்  உள்ள குப்பைக் கிடங்கில் சேகரிக்கப்பட்ட குப்பை,  7 ஏக்கர் பரப்பில், சுமார் 15 அடி உயரத்துக்கும் மேலாக குவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம், குப்பைக் கிடங்கில்  பெரிய இயந்திரத்தை நிறுவி, கல், மண், ஜல்லி,  பிளாஸ்டிக் என  குப்பையை தனித்தனியாகப் பிரிக்கின்றனர். பின்னர்,  பிளாஸ்டிக், தோல்  என மறுசுழற்சிக்குச் செல்லும் கழிவுகளை தனியாகப் பிரிக்கின்றனர். தற்போது ஏறத்தாழ 3 ஏக்கரில் இருந்த குப்பை அகற்றப்பட்டுவிட்டது. மீதமுள்ள குப்பையும் விரைவில் சுத்தப்படுத்தப்படும் என்று பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் பெருமிதத்துடன் கூறுகிறது.

என்னதான் செய்கிறார்கள் குப்பையை?

இங்குள்ள குப்பை மலைக்கு அருகில் ஒரு பெரிய இயந்திரத்தை நிறுவி, 10-க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். தினமும் சுமார் 38 டன் குப்பை கையாளப்படுகிறது. இதில், மக்கும் குப்பை 24  டன், மக்காத குப்பை 14  டன். மக்கும் குப்பையைக் கொண்டு, உயிரி உரம்,  மண்புழு உரம் என 10 டன் உரம் தயாரிக்கப்படுகிறது.

மக்கும் குப்பையை அரைத்து, 45 நாட்களுக்கு தண்ணீர் தெளித்து பதப்படுத்துகிறார்கள். பின்னர், இயந்திரத்தின் மூலம் குப்பையை பொடிப்பொடியாக்கி இயற்கை உரமாக மாற்றுகின்றனர். இந்த உரத்தைப் பயன்படுத்தி, 12 இடங்களில் காய்கறி சாகுபடி நடைபெறுகிறது.

மேலும், வாழை இலை, தோட்டக் கழிவுகள், மர இலைகள் போன்றவை அரைத்து, உலர வைத்து,  தனியார் உயிரி உரத் தயாரிப்பு நிறுவனத்துக்கு வழங்குகின்றனர்.  மீதமுள்ள குப்பையில், ரப்பர், பிளாஸ்டிக், மரங்கள், தேங்காய் மட்டைகள், கயிறு கழிவுகள், காகிதம், கண்ணாடிப் பொருட்கள்,  இரும்பு உள்ளிட்டவை தனித்தனியே பிரிக்கப்பட்டு, மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன.

எரிபொருளாக மாறும் பிளாஸ்டிக் கழிவுகள்

இதுகுறித்து, நகராட்சி ஆணையர் ஜி.கண்ணன் கூறும்போது, "பிளாஸ்டிக் கழிவுகளை தரம் பிரித்து, சுத்தம் செய்து, மதுக்கரையில் உள்ள சிமென்ட் ஆலைக்கு அனுப்புகிறோம். இதுவரை 6 டன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், 30 டன் அனுப்ப தயார்நிலையில் உள்ளது. மக்கும் குப்பையை இயற்கை எருவாக மாற்றி, விவசாயிகளுக்கு வழங்குகிறோம். மக்காத குப்பையை சிமென்ட் ஆலைக்கு எரிபொருளாகக்  கொடுக்கிறோம். கழிவாக ஒதுக்கப்பட்ட குப்பை, நகராட்சிக்கு வருவாயாக மாற்றப்படுகிறது. இன்னும் ஓராண்டில்  4 ஏக்கர் பரப்பில் உள்ள குப்பை மலை மொத்தமா காலியாகிவிடும்.பொதுமக்களும், குப்பையை  வீட்டிலேயே தரம் பிரித்து, நகராட்சிக்கு வழங்கலாம். இதன் மூலம் குப்பைத் தொட்டி இல்லாத நகராட்சியாக பொள்ளாச்சியை மாற்றலாம்" என்கிறார் நம்பிக்கையுடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x