

உடுமலைப்பேட்டை காவல் நிலையத்தில் பெண் சித்ரவதை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த பி.ராஜகுமாரி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
“நான் எனது கணவருடன் மதுரையில் வசிக்கிறேன். எனது தாயார் உடுமலைப்பேட்டையில் வசித்து வருகிறார். அங்குள்ள ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்த எனது தாயார், லீலாவதி என்பவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார்.
இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் ஆகஸ்ட் 9-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதற்கும் எனது தாயாருக்கும் தொடர்பில்லை. அப்பாவியான எனது தாயாரை கைது செய்த உடுமலைப்பேட்டை போலீஸார், கொலைக் குற்றத்தை ஒப்புக் கொள்ளும்படி கட்டாயப் படுத்தி அவரை சித்ரவதை செய்துள்ளனர்” என்று அவரது மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீது நீதிபதி வி.ராமசுப்ரமணியன் விசாரணை மேற்கொண்டார். மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன், “மனுதாரரின் தாயாரை சித்ரவதை செய்த காவல் துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். இதற்காக சுதந்திரமான புலன் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும்” என்று வாதிட்டார். அரசுத் தரப்பில் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த் பாண்டியன் ஆஜராகி வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராமசுப்ரமணியன், மனுதாரரின் தாயார் காவல் நிலைய சித்ரவதைக்கும், பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளானதாகக் கூறப்படுவது பற்றி சி.பி.ஐ. புலன் விசாரணை நடத்த வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு விவரம்: “மனுதாரரின் தாயாரை ரிமாண்ட் செய்த மாஜிஸ்திரேட் அறிக்கை, உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனை அறிக்கை, கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி அறிக்கை, கோயம்புத்தூர் 4-வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அறிக்கை, கோயம்புத்தூர் மத்தியச் சிறையின் மருத்துவ அதிகாரி அறிக்கை என அனைத்து அறிக்கைகளும் மனுதாரரின் தாயாருக்கு உடலில் காயங்கள் இருந்ததை உறுதிப்படுத்தி யுள்ளன. காயங்கள் இருந்ததை மறுக்க முடியாத காரணத்தால், மனுதாரரின் தாயார் குடிபோதை யில் கீழே விழுந்து காயங்கள் ஏற்பட்டதாக உடுமலைப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கூறியுள்ளார்.
மனுதாரரின் தாயாருக்கு விரல்களில் காயங்கள் இருந்தது பற்றி கோவை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அறிக்கை கூறுகிறது. எனினும் விரல் முழுவதும் இல்லாமல் நகங்களுக்கு அருகில் மட்டும் காயங்கள் இருந்துள்ளன. இது, நகங்களில் போலீஸார் ஊசியால் குத்தியதாக மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகளை தொடர்புபடுத்துவதாக உள்ளது.
பி.வி.சி. குழாயைப் பயன்படுத்தி காவல் துறையினர் தாக்கியதால் ஏற்பட்ட காயம் பற்றி கோவை மத்திய சிறை மருத்துவ அதிகாரி கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் பின்தங்கிய ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர். உடுமலைப்பேட்டையில் தனியாக தங்கியிருந்து, ஒரு ஓட்டலில் பாத்திரங்களை கழுவி வாழ்க்கையை நடத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் நீதி கேட்டு எழுப்பிய அழுகுரலை உள்ளுர் கீழ்நீதிமன்ற நீதிபதியும், காவல் துறை உயர் அதிகாரிகளும் காது கொடுத்து கேட்கவில்லை.
இந்நிலையில் இந்த வழக்கின் சூழ்நிலையைப் பார்க்கும்போது, தமிழகக் காவல் துறை அல்லாத பிற புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்துவதுதான் சரியாக இருக்கும். ஆகவே, இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. புலன் விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. துணை கமிஷனர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி மூலம் சி.பி.ஐ. புலன் விசாரணை உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும். மாநில அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.2 லட்சத்தை இரண்டு வாரத்துக்குள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும்” என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.