Published : 19 Jan 2014 12:00 AM
Last Updated : 19 Jan 2014 12:00 AM

பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக: ஜன.21 முதல் தொகுதிப் பங்கீடு பேச்சு- பிப்.8-ல் மோடியுடன் பிரச்சாரம் தொடங்க முடிவு

‘பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக கட்சிகள் சேர்வது உறுதியாகிவிட்டது. இந்தக் கட்சிகளுடன் வரும் 21-ம் தேதி முதல் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும்’ என்று காந்திய மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையில் மெகா கூட்டணியை அமைக்கும் முயற் சியை காந்திய மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் மேற்கொண்டுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ், விஜயகாந்த் மற்றும் வைகோவுடன் தமிழருவி மணியனும் பாஜக பிரதிநிதிகளும் பலமுறை பேச்சு நடத்தினர். இதையடுத்து, பாஜக கூட்டணியில் சேர்ந்து போட்டியிடுவோம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார். பாஜக அணியில் இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்கு வேளாளர் மக்கள் கட்சி மற்றும் சில சாதிக் கட்சிகள் இணையும் என கூறப்படுகிறது.

சமீபத்தில் பொதுக்குழுவைக் கூட்டிய பாமக, சமூக ஜனநாயகக் கூட்டணி என்ற பெயரில் வேட் பாளர்களை அறிவித்ததால், பாஜக கூட்டணியில் பாமக இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்தது. இதேபோல், தேமுதிக தலைவர் விஜயகாந்தை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் சந்தித்துப் பேசினார். திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி என்று கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் கூறினர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும், பேராயர் எஸ்றா சற்குணமும் விஜயகாந்தை சந்தித்து திமுக அணிக்கு வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். மமக சார்பிலும் தேமுதிகவுக்கு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதனால், திமுக கூட்டணியில் தேமுதிக சேரும் என பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால், திமுக கூட்டணியில் சேர விஜயகாந்த் விரும்பவில்லை என கூறப்படுகிறது. அங்கிருந்து சாதகமான பதில் வராததை யடுத்து, தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேசவில்லை என கருணாநிதி கூறினார். அதைத் தொடர்ந்து மாநிலங்களவைத் தேர்தலில் திருச்சி சிவாவை திமுக வேட்பாளராக கருணாநிதி வெள்ளிக்கிழமை அறிவித்தார். இதன்மூலம் திமுக அணிக்கு தேமுதிக வருவதற்கான வாய்ப்பு இல்லை என கூறப்பட்டது.

இந்நிலையில், பாஜக கூட்டணியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழ ருவி மணியனிடம், தேமுதிக நிலை குறித்து கேட்டோம். ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த பேட்டி:

பாஜக அணியில் தேமுதிக, பாமக, மதிமுக, கொங்கு வேளாளர் மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகள் வருவது உறுதியாகிவிட்டது. பாஜக அகில இந்திய செயற்குழுக் கூட்டம் முடிந்ததும் தமிழக பாஜக முக்கிய தலைவர்களும், தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவும் வரும் 20-ம் தேதி தமிழகம் வருகின்றனர்.

கூட்டணிக் கட்சிகளுடனான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த் தையை 21-ம் தேதி முதல் தொடங்க உள்ளனர். இம்மாத இறுதிக்குள் தொகுதிப் பங்கீடு இறுதியாகிவிடும். தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும், ஏற்கெனவே தங்களுக்கான தொகுதிகள் குறித்து முடிவு செய்துவிட்டனர்.

பிப்ரவரி 8-ம் தேதி பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். அவர் பங்கேற்கும் கூட்டத்தில், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்று, தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளனர்.

தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளின் ஆதிக்கத்தை மாற்றும் வகையில் இந்தக் கூட்டணிக்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன். திமுக தலைவர் கருணாநிதி ஆயிரம் முயற்சிகள் மேற்கொண்டாலும், பாஜக தலைமையில் வலுவான கூட்டணி அமைவதைத் தடுக்க முடியாது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x