கஜா நிவாரண நிதி: யானைப் பசிக்கு சோளப்பொறியா?- ஜவாஹிருல்லா கண்டனம்

கஜா நிவாரண நிதி: யானைப் பசிக்கு சோளப்பொறியா?- ஜவாஹிருல்லா கண்டனம்
Updated on
1 min read

கஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள தொகை யானைப் பசிக்கு சோளப்பொறி கொடுப்பது போல் உள்ளது என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கஜா புயலால் தமிழகத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்யவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் தமிழக அரசு மத்திய அரசிடம் கஜா புயல் நிவாரணத் தொகையாக ரூ.15,000 கோடியைக் கேட்ட நிலையில் ரூ.1,146 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

தமிழகத்தை கஜா புயல் தாக்கி ஒரு மாதத்திற்கு மேலான நிலையில் இதற்கான நிவாரணத் தொகையை மத்திய அரசு தற்பொழுது அறிவித்துள்ளது. நிவாரணத் தொகை கோரி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான கூட்டத்தில் இந்தத் தொகை ஒதுக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. விளைநிலங்களில் இருந்த பயிர்களும், மரங்கள் அடியோடு சாய்ந்து விவசாயம் முற்றிலும் அழிந்துள்ளது. நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் தடைப்பட்டிருந்தது.

இதுபோன்ற ஒரு பேரிடரால் பாதிக்கப்பட்டு சிதறுண்டு போன மக்களை மீட்டு அவர்களை மீண்டும் அதே இடத்தில் குடியமர்த்தி அவர்களைப் பழைய நிலைக்குக் கொண்டுவர மத்திய அரசு ஒதுக்கியுள்ள தொகை யானைப் பசிக்கு சோளப்பொறி கொடுப்பது போல் உள்ளது.

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் தான் அதிகமாக ஜி.எஸ்.டி வரி வசூலித்து மத்திய அரசிற்கு வழங்குகின்றது. எனினும், மத்திய அரசு, தமிழகம் தவிக்கும் போது தமிழகத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என்பது கண்டிக்கத்தக்கது. சமீபத்தில் அண்டை நாடுகளான பூட்டானுக்கு ரூ.4,500/ கோடியும், மாலத்தீவுக்கு ரூ.10,000 கோடியும் நிதியுதவி அளித்துள்ள மத்திய அரசு தனது சொந்த நாட்டின் ஒரு மாநிலமான தமிழ்நாட்டிற்கு குறைந்த அளவில் நிதியுதவியை அளித்துள்ளது ஒருதலைபட்சமானது.

எனவே, தமிழக அரசு கோரிய நிவாரணத் தொகை முழுவதையும் உடனடியாக வழங்க வேண்டும்'' என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in