Published : 05 Jan 2019 07:45 PM
Last Updated : 05 Jan 2019 07:45 PM

டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்குள் பெண் குத்திக்கொலை: ஆண் நண்பர் வெறிச்செயல்

கிருஷ்ணகிரியில் டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் பணியாற்றும் பெண்ணை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி கொலை செய்தார். பின்னர் அவர்  போலீஸில் சரணடைந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம், கருக்கஞ்சாவடியில் வசித்தவர் செல்வி (32). இவரது கணவர் முனியப்பன். கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துச் செய்த செல்வி தனியாக வசித்து வந்தார். அவருக்கு 14 மற்றும் 10 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தை காப்பாற்ற செல்வி கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரில் உள்ள பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் பணியில் சேர்ந்தார்.

தினமும் பணிக்குச் செல்லும்போது அதே பகுதியில் தனியார் ஜவுளிக்கடையில் பணியாற்றும் தௌலத் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு முதல் இருவரும் நட்பாக பழக நாளடைவில் நட்பு நெருக்கமாகியுள்ளது. செல்வியின் பணத்தேவைகளுக்காக தௌலத் அவ்வப்போது பணம் கொடுப்பதுண்டு.

இந்நிலையில் மாலை 4 மணி அளவில் செல்வி வேலை செய்யும் கடைக்கு தௌலத் வந்துள்ளார். கடையில் செல்வி மட்டும் இருப்பதை அறிந்து அங்கு வந்த தௌலத் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர் திடீரென  அங்கிருந்த  கத்தியால் செல்வியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் செல்வி அலறவே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்துள்ளனர்.

ஆனால் அதற்குள் தௌலத் தப்பி ஓடிவிட்டார். கத்தியால் குத்துப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய செல்வி கடைக்குள்ளேயே உயிரிழந்தார்.இதையடுத்து பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி போலீஸார் செல்வியின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே தப்பி ஓடிய தௌலத் கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் தான் காவேரிப்பட்டினம் அண்ணா நகர் பகுதியில் வசிப்பதாகவும்,  கிருஷ்ணகிரியில் துணி கடையில் வேலை செய்வதாகவும்,  கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் செல்வியுடன் பழக்கம் ஏற்பட்டு தொடர்பில் உள்ளதாக கூறியுள்ளார்.

அவ்வப்போது செல்விக்கு பணம் உதவி செய்து வந்த நிலையில் இன்று தனக்கு இரண்டாயிரம் பணம் தேவைப்படுவதாக செல்வி கேட்டதை அடுத்து தான் பணம் கொடுப்பதற்க்காக செல்வி பணி புரியும் கடைக்கு வந்ததாகவும், அப்போது செல்வி வேறு ஒரு ஆணுடன் செல்போன் பேசிகொண்டு இருந்ததாகவும் கூறியுள்ளார்.

அது தொடர்பாக கேட்டதை அடுத்து தங்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அதனால் ஆத்திரம் அடைந்த தான் கடையில் இருந்த கத்தியை எடுத்து செல்வியை கழுத்து வயிறு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தியதாகவும்  செல்வி உயிரிழந்ததை அடுத்து தான் போலீஸில் சரணடைந்ததாக தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் இதுவரை இதுபோன்ற சம்பவம் நடந்ததில்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர்.முறையற்ற வாழ்க்கை வாழ்ந்த இளைஞர் கணநேர கோபத்திற்காக ஒரு பெண்ணையும் கொன்று அவரது மகள்களையும் அனாதைகளாக்கிவிட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தௌலத் சொல்வது உண்மையான தகவல்தானா? என போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x