

சென்னை அருகே உள்ள மகாபலி புரத்தில் அடுத்த மாதம் 30-ம் தேதி நடைபெறும் பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் கருணா நிதியும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் நீண்ட காலத்துக்குப் பிறகு நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு சந்தித்துப் பேசினால், அது முக்கிய நிகழ்வாகக் கருதப் படும் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
திமுக மதிமுக கட்சிகளுக்கு இடையே சமீபகாலமாக இணக்க மான சூழல் உருவாகி வருகிறது. வைகோவின் பேச்சு, அறிக்கை ஆகியன திமுக ஆதரவு தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகின்றன.
திமுக தலைவர் கருணாநிதியை பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்து, அக்டோபர் 30-ம் தேதி மகா பலிபுரத்தில் நடக்க இருக்கும் தனது பேரன், பேத்தி திருமணத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக தலைவர் கருணாநிதி அரசியல் நாகரீகம் தெரிந்தவர்” என்று பாராட்டினார். இதையடுத்து திமுக கூட்டணிக்கு பாமக வரக்கூடும் என்று பேசப்பட்டது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் ராமதாஸ் சந்தித்து, தனது இல்லத் திருமணத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்த திருமணத்துக்கு நிச்சயம் வருவதாக கருணாநிதியும், வைகோவும் ராமதாஸிடம் உறுதி அளித்துள்ளனர்.
இந்த திருமணத்துக்கு வரும்போது கருணாநிதியும், வைகோவும் சந்தித்துப் பேச வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த சந்திப்பு சட்டமன்ற தேர்தல் கூட்டணிக்கான அச்சாரமாகக்கூட அமையலாம் என்று அரசியல் வட்டாரத்தில் இப்போதே பரபரப்பாக பேசப்படுகிறது.
மதிமுகவும் பாமகவும் இப்போது பாஜக கூட்டணியில் உள்ளன. ராமதாஸ், கருணாநிதியையும், வைகோவையும் சந்தித்துப் பேசியி ருப்பதால் தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது மதிமுகவும், பாமகவும் திமுக கூட்டணியில் இடம்பெறக்கூடும் என்றும், பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது என்றும் பேசப்படுகிறதே என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது பேரன், பேத்தி திருமணத் துக்காக பத்திரிகை கொடுக்க தமிழக அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார். இதனை வைத்து கூட்டணி உருவாகிவிடும் என்று கூறிவிட முடியாது. கூட்டணி அமைப்பதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளன. மேலும், தமிழகத்தில் மக்களவை தேர்தலின் போது உருவான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. உள்ளாட்சி தேர்தலில்கூட அவர்கள் எங்களுக்கு ஆதரவு கடிதம் கொடுத்தார்கள். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளன. இந்நிலையில், முன்பே கூட்டணி குறித்தெல்லாம் யூகத்தின் அடிப்படையில் செய்தி களை கூறுவது தவறு என்றார்.