

காணும் பொங்கலன்று கடற்கரையில் கூடும் கூட்டத்தில் குழந்தைகள் காணாமல் போவதைத் தடுக்க போலீஸார் சிறப்பு ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் போலீஸாரே எதிர்பாராத வண்ணம் கணவர்கள் காணாமல் போன விநோத சம்பவம் நடந்தது.
காணும் பொங்கல் தமிழகம் முழுவதும் விசேஷமான ஒரு பண்டிகை. சென்னையைப் பொறுத்தவரை பொதுமக்கள் முக்கியமாக மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கில் கூடுவார்கள். குழந்தைகளுடன் சந்தோஷமாக கடற்கரைக்கு வரும் சில குடும்பத்தினர் குழந்தைகளைத் தொலைத்துவிட்டு தேடுவது வழக்கமான நிகழ்வாக இருந்தது.
இதைத் தடுக்க போலீஸார் குழந்தைகள் கையில் பெற்றோரின் தொடர்பு எண்ணை எழுதி பட்டையை அனுப்பும் முறையைக் கொண்டு வந்ததால் குழந்தைகள் காணாமல் போவதும், அதை தேடிக் கண்டுபிடிக்க நேர விரயமும் பெருமளவில் குறைந்துபோனது.
போலீஸார் காணாமல் போன குழந்தைகளை மீட்பது குறித்து யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நேற்று காணும் பொங்கலுக்கு குடும்பத்துடன் வந்த சில கணவன்மார்களும் காணாமல் போனது போலீஸார் மத்தியில் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.
நேற்று காணும்பொங்கலை ஒட்டி மெரினாவில் ஏறத்தாழ ஒரு லட்சம்பேர் வந்ததாக கூறப்படுகிறது. இதில் குழந்தைகள் காணாமல் போவதைத் தடுக்க கையில் பட்டை அணிவித்து அனுப்பியதால் 25 குழந்தைகள் மட்டுமே காணாமல் போய் அவர்கள் விரைவில் மீட்கப்பட்டனர். எவ்வித அசம்பாவிதாமும் நிகழாவண்ணம் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாட்டை சிறப்பாகச் செய்திருந்தனர்.
மிகப்பெரும் எண்ணிக்கையிலான ஜனத்திரளில் போலீஸாரே எதிர்பாராத சில நிகழ்வுகள் நடந்தன. பாதுகாப்புக்காக 30க்கும் மேற்பட்ட கண்ட்ரோல் ரூம் பூத்துகளை அமைத்துப் பணியில் இருந்தனர். அப்போது பல பூத்துகளில் பெண்கள் அழுதுகொண்டே தங்கள் கணவரைக் காணவில்லை என வந்து புகார் அளித்தனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் போன் செய்யுங்கள் என்று கூற இருவரில் ஒருவரிடம் செல்போன் இல்லாமல் இருப்பதும், அல்லது டவர் இல்லாமல் இருப்பதும், சுவிட்ச் ஆப் ஆகியிருப்பதும் தெரியவந்தது.
போலீஸார் பூத் அமைத்துள்ளதால் அடையாளத்தைச் சொல்லி எப்படியும் கணவரை அழைப்பார்கள் என்கிற நம்பிக்கையில் வர போலீஸார் அவர்களிடம் அவர்களது கணவர் அடையாளம், பெயர், சட்டை கலர் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டு மைக்கில் அழைத்தனர். அதற்குப் பிறகு இருவரும் தங்கள் குடும்பத்துடன் இணைந்தனர்.
குழந்தைகள் காணாமல் போகும் புகார்கள்தான் எப்போதும் வரும். ஆனால் இந்த முறை கணவர்கள் காணாமல் போன புகாரும் வந்தது போலீஸாரிடையே பரபரப்பாக பேசப்படும் விஷயமாகி உள்ளது. இதற்கு எப்படி தீர்வு காண்பது என போலீஸாரிடையே குழப்பமும் ஏற்பட்டுள்ளதாக நகைச்சுவையுடன் பேசிக்கொண்டனர். இதனிடையே காணாமல் போன 7 கணவர்களையும் கண்டுபிடித்து போலீஸார் ஒப்படைத்து விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.