Published : 30 Jan 2019 06:23 PM
Last Updated : 30 Jan 2019 06:23 PM

ஜாக்டோ-ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்

கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில் கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்தது. இதையொட்டி மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பலர் கைது செய்யப்பட்டனர். அரசு விதித்து கெடுவுக்குள் பணிக்கு திரும்பாததால், மொத்தம் 1,450 பேர் இதுவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை இரவுக்குள் பணிக்கு திரும்புமாறு பள்ளிக் கல்வித்துறை அவகாசம் அளித்திருந்தது.

இந்நிலையில், இன்று 99% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பிவிட்டதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், போராட்டம் தொடர்ந்து நடைபெற்ற நிலையில், பள்ளி மாணவர்களின் நலனுக்காக போராட்டத்தைக் கைவிட வேண்டும் என, திமுக, பாமக, இடதுசாரி உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.

இதையடுத்து, போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளதாக ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, செய்தியாளர்களை கூட்டாகச் சந்தித்த ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், "முதல்வர் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவார் என அமைச்சர் ஜெயக்குமார் உறுதியளித்தார். அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால், பேச்சுவார்த்தை நடத்தாமல் போராடியவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்தது.

பிப்ரவரி மாதம் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவிருப்பதால், ஏழை, எளிய மாணவர்களின் படிப்பு, பெற்றோர்களின் மனநிலை, முதல்வரின் வேண்டுகோள், அனைத்துக் கட்சியினரின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கிறோம்.

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும். வழக்குகளை காவல்துறை திரும்பப் பெற வேண்டும். முதல்வர் எங்களை அழைத்துப் பேச வேண்டும்.

தற்காலிக ஆசிரியர் நியமனம் சாத்தியமற்றது. அவர்களால் மாற்றத்தை உருவாக்க முடியாது. தமிழக அரசு எங்களின் முதுகில் குத்திவிட்டது. ரணத்துடன் பணிக்குச் செல்கிறோம்" என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x