

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் விஐபிக்களின் மாடுகளும் போட்டியில் குதித்தன. அவை சிக்காமல் சென்றது பார்வையாளர்களைக் கவர்ந்தது.
ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரியத்துடன் ஊறிப்போன ஒன்று. ஆண்டு முழுவதும் தமிழகத்தில் எங்காவது ஒரு இடத்தில் ஜல்லிக்கட்டு நடந்தாலும் பொங்கல் பண்டிகையை ஒட்டி அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுர் ஜல்லிக்கட்டு புகழ்பெற்றது.
அதிலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்றது. இதைக்காண உலகம் முழுதும் இருந்து வெளிநாட்டினரும் வருவதுண்டு. காணும் பொங்கலன்று நடக்கும் இந்தப் போட்டிக்கு பல மாவட்டங்களிலிருந்து காளைகளும் காளைகளை அடக்கும் காளையர்களும் வந்து காலை முதல் மாடுகளைப் பிடிப்பது கண்கொள்ளாக்காட்சி ஆகும்.
காளைகளில் பல வகை உண்டு. சில காளைகள் சுற்றுக்காளை என்பார்கள். அவை களத்தில் தன்னை யாரும் தொடவிடாமல் சுற்றுப்போட்டு அனைவரையும் விரட்டும். காளைகளை வளர்ப்பதும் அதை ஜல்லிக்கட்டில் விடுவதும் விவசாயத்தோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு இன்பமான நிகழ்வு.
இதற்காக காளைகளை ஆண்டுக்கணக்கில் குழந்தைபோல், தனது வீட்டில் ஒரு அங்கத்தினர்போல் வளர்த்து வருவார்கள். இதில் பல விஐபிக்களும் அடக்கம். ஜல்லிக்கட்டு பிரச்சினை வெடித்தபோது அதற்காக டெல்லி வரை சென்று பேச்சுவார்த்தை நடத்த ஓபிஎஸ் சென்றபோது அவருக்கு ஜல்லிக்கட்டு பற்றி என்ன தெரியும் என சிலர் கேள்வி எழுப்பினர்.
ஆனால் தனது வீட்டிலும் அமைச்சரான பின்னர் கிரீன்வேஸ் சாலையிலும் இரண்டு காளைகளை அவர் வளர்த்து வந்தது பின்னர் செய்திகளில் வெளியானது. இதேபோன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் காளையும் புகழ்பெற்றது. ஆனால் சமீபத்தில் அது உயிரிழந்தது சோகமான நிகழ்வு.
இன்றைய போட்டியிலும் விஐபிக்களின் காளைகள் துள்ளிவந்தன. இலங்கை அமைச்சர் தொண்டைமானின் காளை, சசிகலாவின் காளை, டிடிவி தினகரனின் காளை, அமைச்சர் செல்லூர் ராஜுவின் தம்பி காளை, உசிலம்பட்டி எம்.எல்.ஏ நீதிபதியின் காளை, பொன்னப்பர் ஹோட்டல் அதிபரின் காளை, காவல் உதவி ஆய்வாளர் ஒருவரின் காளை, திமுக, அதிமுக நிர்வாகிகளின் காளைகள் என பலரது காளைகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களம் இறங்கின.
இதில் எம்.எல்.ஏ நீதிபதியின் காளை பிடிபட்டது. டிடிவி தினகரன் காளைக்கு ரூ.5000 ரொக்கம் அறிவிக்கப்பட்டது. ஆனால் மாடு நின்று சுற்றிவந்து அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்றது. அதன் அருகில் யாரும் செல்ல முடியவில்லை. இதை அறிவிக்கும்போது அமைச்சர்கள், ஓபிஎஸ் தம்பி ராஜா உள்ளிட்டோர் பார்வையாளர் மாடத்தில் இருந்தனர்.
சசிகலாவின் கருப்பு நிறக்காளை துள்ளி குதித்து தவ்விச் சென்றது. தொண்டைமானின் மாடும் பிடிபடவில்லை, அமைச்சர் செல்லூர் ராஜுவின் தம்பியின் காளையும் பிடிபடவில்லை.
காளையர்களுக்கு அமைச்சர்கள், திமுக எம்.எல்.ஏக்கள், பாஜக தலைவர் தமிழிசை, ஓபிஎஸ் ராஜா, மற்றும் வியாபார நிறுவனங்கள் ஏராளமான பரிசுத்தொகை அறிவித்து உற்சாகப்படுத்தினர்.