

தமிழகத்தில் சுற்றுச்சுழலை மேம்படுத்த விழாக்கள் மற்றும் சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பாளர்களுக்கு செடிகள் விநியோகிப்பதை ஊக்கவிக்க தோட்டக்கலைத்துறை தற்போது குறைந்த விலையில் பொதுமக்களுக்கு செடிகளை வழங்கும் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.
மரங்கள் சுற்றுச்சூழலைப் பசுமையாக்குவதுடன் பாதுகாக்கின்றன. மனிதர்கள், விலங்குகள், பறவைகளுக்குத் தேவையான பழங்கள், எரிபொருட்கள், மருத்துவ மூலப்பொருட்கள் வழங்குவதுடன் பறவைகளின் வசிப்பிடமாகவும் உள்ளன. அதோடு சுற்றுச்சூழலில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடு மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் வாயுக்களின் அளவை கணிசமாகக் குறைத்து மனிதர்களுக்கும், இதர உயிர்களுக்கும் தேவையான ஆக்சிஜனை வழங்குகிறது.
கடந்த காலத்தில் இந்த விழிப்புணர்வு இல்லாததால் பொதுமக்கள், இருக்கிற மரங்களை மாற்றுப்பயன்பாட்டிற்கு வெட்டினர். மரக்கன்றுகள் நடுவதிலும் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் சமீப காலமாக பெரும் விழிப்புணர்வு ஏற்பட்டு விழாக்கள், பண்டிகைகள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் வருகை தரும் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு விழா ஏற்பாட்டாளர்கள் மரக்கன்றுகள், பழக்கன்றுகளை வழங்கும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது.
தற்போது தனி நபர் வீடுகளிலும், சமூகத்திலும் சாதாரண பிறந்த நாள் முதல் ஊர் திருவிழாக்கள், குடும்ப விழாக்கள், பண்டிகைகள் மற்றும் இதர நிகழ்ச்சிகள், தற்போது அதிக அளவு கொண்டாடப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் மரக்கன்றுகள், பழக்கன்றுகள் வழங்குவதை ஊக்குவிக்க பொதுமக்களுக்கு,விழாக்கள், பண்டிகைகள் மற்றும் சுபகாரியங்கள் நிகழ்ச்சிகளுக்கு தோட்டக்கலைத்துறை பண்ணைகளில் குறைந்த நிலையில் மரக்கன்றுகள், பழச்செடிகளை விநியோகிப்பதற்கான புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து மதுரை அரசு தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பூபதி கூறியதாவது:
''தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் 61 அரசு தோட்டக்கலை பண்ணைகளும், 19 பூங்காக்களும் செயல்படுகின்றன. 2017-18ம் ஆண்டில் மட்டும் ரூ.9.26 கோடியில் தரமான பழக்கன்றுகள், மலர் கன்றுகள், அழகுச் செடிகள் மற்றும் மரக்கன்றுகள் இந்தப் பண்ணைகளில் மானிய விலையில் விவசாயிகளுக்கு உற்பத்தி செய்து வழங்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் 5 லட்சம் தோட்டக்கலை செடிகள் அரசு தோட்டக்கலைப்பண்ணையில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
நெல்லி, சப்போட்டா, மாதுளை, புளி, எலுமிச்சை, நாவல், பப்பாளி மற்றும் விளாம்பழம் போன்ற பாரம்பரிய பழக்கன்றுகள், கருவேப்பிலை, கொடுக்காப்புளி, முந்திரி, வேம்பு, மர வேம்பு, புங்கம், தேக்கு மற்றும் சவுக்கு போன்ற மரங்களும் மல்லிகை மற்றும் அரளி போன்ற பூஞ்செடிகளும் வழங்கப்படுகின்றன.
இந்தப் பண்ணைகளில் அழகுச் செடிகள் ரூ.5 முதல் ரூ.10 வரையிலும், வேம்பு, புங்கம் போன்ற மரச்செடிகள் ரூ.10 முதல் ரூ.20 வரையிலும், பழச்செடிகள் ரூ.10 முதல் ரூ.60 வரையிலும், மலர்ச் செடிகள் ரூ.10 முதல் ரூ.30 வரையிலும் விற்கப்படுகிறது. திருமண விழாக்கள், திருவிழாக்கள் மற்றும் சுபநிகழ்ச்சிகள்நடத்துவோர் விருந்தினர்களுக்கு செடிகளை வழங்குவதற்கு, இந்தச் செடிகளை குறைந்தவிலையில் பெறுவதற்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தையோ அல்லது மாவட்ட துணை இயக்குனர் அலுவலகத்திலோ அணுகி இந்தத் திட்டத்தின் கீழ் முன்பதிவு செய்து பயன்பெறலாம். இதுதவிர உழவன் கைபேசி செயலி மற்றும் வாட்ஸ் அப் செயலி வாயிலாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்''.
இவ்வாறு பூபதி தெரிவித்தார்.