

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவின் முன்னாள் கார் ஓட்டுநர் ராஜாவிடம் 15 சவரன் செயின் பறிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் அளித்த புகாரில் ஒருவரை பிடித்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்தவர்களில் ஜெ.தீபாவும் ஒருவர். ஜெயலலிதாவின் மருமகள் என்கிற ஒரே தகுதியுடன் அவர் அரசியலுக்கு வந்தார்.
ஜெ.தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையைத் தொடங்கினார். ஆனால், அமைப்பைத் தொடங்கிய தீபா முழுநேர அரசியலில் ஈடுபடாமல் இருந்தார். இதனால், அவர் மீது பல விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், அவரது ஓட்டுநர் ராஜா என்பவருக்கு அமைப்பில் முக்கியமான மாநில நிர்வாகி பொறுப்பு அளிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த தீபாவின் கணவர் மாதவன் எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.
இந்நிலையில், ராஜாவை அமைப்பில் இருந்து நீக்கினார் ஜெ.தீபா. ஆனால், மீண்டும் புதிய பதவியுடன் ராஜா சேர்க்கப்பட்டார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையிலிருந்து ராஜா நீக்கப்பட்டார்.
“அஇஅதிமுக (ஜெ.தீபா அணி) மற்றும் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும், விதிகளுக்கும் மாறாகத் தொடர்ந்து, கழகத்திற்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் கழகத்திலிருந்தும், பேரவையின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், ஏ.வி.ராஜா விடுவிக்கப்படுவதாக தீபா அறிவித்தார்.
இதன்பின்னர் ஏ.வி.ராஜா பொதுவெளியில் வராமல் இருந்தார். இந்நிலையில் இன்று ராஜா மாம்பலம் காவல் நிலையத்தில் ஒரு புகாரை கொடுத்தார். அதில் தனது 15 சவரன் செயினை பறித்துச் சென்றதாக தீபாவின் அமைப்பில் இருந்து பின்னர் வெளியேறிய நிர்வாகி ஈ.சி.ஆர்.ராமச்சந்திரன் மீது புகார் அளித்தார்.
முன்னர் ஜெ.தீபாவின் அமைப்பில் ஈசிஆர். ராமச்சந்திரன் இருந்தபோது தீபாவிடம் கொடுத்த பணத்தை தம்மிடம் கேட்டதாகவும் அவர் வாங்கிய பணத்திற்கு தாம் எப்படி பொறுப்பாக முடியும் என தான் கூறியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், வாக்குவாதத்தின் முடிவில் தான் அணிந்திருந்த 15 சவரன் நகையை அவர் பறித்துச் சென்றதாக மாம்பலம் காவல் நிலையத்தில் ராஜா புகார் அளித்துள்ளார்.
ராஜாவின் புகாரின் அடிப்படையில் ஒருவரை போலீஸார் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.