Published : 06 Sep 2014 12:08 PM
Last Updated : 06 Sep 2014 12:08 PM

திருவள்ளூர் மாவட்டத்தில் 60 வன்கொடுமை வழக்குகள் பதிவு: தேசிய ஆதிதிராவிடர் நல ஆணைய உறுப்பினர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு முதல், இதுவரை 60 வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தேசிய ஆதிதிராவிடர் நல ஆணைய உறுப்பினர் கமலம்மா தெரிவித்துள்ளார்.

தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையம் சார்பில், திருவள் ளூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலனுக்காக அரசு ஒதுக்கும் நிதிகள் வாயிலாக மேற்கொள்ளப்படும் பணிகள், பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் வன்கொடுமை வழக்குகள் உள்ளிட்டவை தொடர்பான ஆய்வுக் கூட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது.

இந்த கூட்டத்தில் தேசிய ஆதிதிராவிடர் நல ஆணைய உறுப்பினர் கமலம்மா மற்றும் உதவி இயக்குநர் ராமசாமி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், மாவட்ட எஸ்.பி., சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) காசி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கருணாநிதி உள்ளிட்ட அதிகாரிகள், ஆதிதிராவிடர் நல அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆதிதிராவிடர் இன மக்கள் பங்கேற்றனர்.

தேசிய ஆதிதிராவிடர் ஆணைய உறுப்பினர் கமலம்மாவிடம் ஆதிதிராவிடர் நல அமைப்புகளின் பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.அதில், திருவள்ளூர் மாவட்டத் தில், வன உரிமை சட்டத்தின்படி, வனப்பகுதியில் நீண்டகாலமாக வாழ்ந்துவரும் பழங்குடியின மக்கள் உள்ளிட்டவர்களுக்கு இலவச வீட்டுமனைகள் வழங்கப் படவில்லை.

தனிநபர் கழிவறை கட்ட மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்யும் 11 ஆயிரம் ரூபாய் போதியதாக இல்லை. இரு அரசு கல்லூரிகள் உட்பட நூறுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு கல்லூரிகள் செயல்படும் திருத்தணி, பொன்னேரியில் மட்டுமே ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள் செயல்படுகின்றன.

ஆதிதிராவிடர் மாணவர் களுக்கு மத்திய அரசு வழங்கும் கல்விக் கட்டணத்தை, அம்மாணவர்கள் படிக்கும் தனியார் கல்லூரிகளுக்கு மாநில அரசு உடனடியாக அளிக்காததால், பெரும்பாலான தனியார் கல்லூரி நிர்வாகங்கள், ஆதிதிராவிடர் மாணவர்களிடம் கல்விக் கட்ட ணத்தை வசூலிக்கின்றன என எடுத்துரைக்கப்பட்டன.

பிறகு, தேசிய ஆதிதிராவிடர் நல ஆணைய உறுப்பினர் கமலம்மா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

திருவள்ளூர் மாவட்ட ஆதி திராவிடர் இனத்தை சார்ந்த பொதுமக்களிடமிருந்து கடந்த 2011-ம் ஆண்டு முதல், இதுவரை 60 வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், நகரப் பகுதிகளிலிருந்து 2 வழக்குகள், கிராமப் பகுதிகளிலிருந்து 58 வழக்குகள் வரப்பெற்றுள்ளன.

இதில் 26 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு பண பயன் வழங்கப் பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு பெறப்பட்ட பெரும்பாலான மனுக்கள் மீது நடவடிக்கை நிலுவையில் உள்ளது.

இதுகுறித்து உரிய அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும்.

ஆய்வுக் கூட்டத்தில், ஆதிதிராவிடர் நல அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆதிதிராவிடர் இன மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். அது தொடர்பாக அரசுக்கு உடனடியாக பரிந்துரை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x