

நாடாளுமன்றத்தில் சிறப்புடன் பணியாற்றிய எம்.பி.க்களுக்கு 'சன்சத் ரத்னா' விருதுகளை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கி கவுரவித்தார்.
ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் ஆலோசனையின்படி அவரே தொடங்கி வைத்தது தான் ‘சன்சத் ரத்னா’ விருது வழங்கும் விழா ஆகும். கடந்த 2010-ம் ஆண்டு முதல் இந்த விழா ஆண்டுதோறும் சென்னையில் நடந்து வருகிறது. பிரைம் பாயிண்ட் பவுண்டேசன் எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனமும், 'பிரிசென்ஸ்' இணையதளப் பத்திரிகையும் ஒருங்கிணைந்து இந்த விழாவை நடத்தி வருகின்றன. நாடாளுமன்ற சாதனையாளர்களுக்கு மக்கள் மன்றத்தில் இருந்து வழங்கப்படும் ஒரே விருது இது தான்.
நடப்பு ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சென்னை ராஜ்பவனில் உள்ள தர்பார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களில் சிறந்த பங்களிப்பை நாடாளுமன்றத்தில் வழங்கியோருக்கான 10-வது ‘சன்சத் ரத்னா விருதுகளை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார்.
நாடாளுமன்ற நிலைக்குழுவில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லிக்கு விருது வழங்கப்பட்டது. 16-வது மக்களவையில் சிறப்பாகப் பணியாற்றிய வகையில் விவாதங்களில் பங்கேற்ற பிரிவில் ஒடிசா மாநிலம் கட்டாக் தொகுதியின் பிஜூ ஜனதாதள எம்.பி. பகதூகாரி மகாப், கேரள மாநிலத்தைச் சேர்ந்த புரட்சிகர சோசலிச கட்சி எம்.பி. பிரேமசந்திரன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
ஜூரி கமிட்டியின் சிறப்பு விருதுக்கு இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி அனுராக் தாகூர், பெண்கள் பிரிவு, கேள்விகள், ஒட்டுமொத்தமாக சிறப்பாகப் பணியாற்றியதில், மகாராஷ்டிர மாநிலம் தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, தனிநபர் மசோதா பிரிவில் ஜார்கண்ட் மாநில பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேவுக்கும் 'சன்சத் ரத்னா' விருது வழங்கப்பட்டது.
முதல் முறை எம்.பி.க்களில் ஒட்டுமொத்தப் பிரிவில் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சங்கராவ் சத்தவ் மற்றும் சிவசேனா எம்.பி.ஷிரிரங் அப்ப பர்னே, கேள்விகளில் ஒட்டுமொத்தப் பிரிவில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக தேசியவாத காங்கிரஸ் எம்.பி. தனஞ்சய் பீமாராவ் மகாதிக், பெண்களில் ஒட்டுமொத்தப் பிரிவில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக மகாராஷ்டிர மாநில பாஜக எம்.பி. ஹீனா விஜய்குமார் கவித் ஆகியோர் விருது பெற்றனர்.
இதுதவிர மாநிலங்களவையில், 2018-ம் ஆண்டு ஓய்வு பெற்றவர்களில் ஒட்டுமொத்தமாக சிறப்புடன் பணியாற்றிய பிரிவில் காங்கிரஸ் எம்.பி. ரஞ்சினி பாட்டீல், 2018-ம் ஆண்டு ஓய்வு பெற்றவர்களில் விவாதங்களில் கலந்துகொண்டு தனித்துவத்துடன் செயலாற்றிய பிரிவில் தெலங்கானா மாநில காங்கிரஸ் எம்.பி. அனந்த பாஸ்கர் ராபோலு ஆகியோருக்கும் 'சன்சத் ரத்னா விருதுகள்' வழங்கப்பட்டன.
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, பிரைம் பாயிண்ட் பவுண்டேஷன் தலைவர். கே. சீனிவாசன், 'பிரிசென்ஸ்' என்ற இணையதளப் பத்திரிகை ஆசிரியர் சூசென் கோஷி, சன்சத் ரத்னா விருது கமிட்டி தலைவர் பவனேஷ் தியோரா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.