ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை கோரிய வழக்கு முடித்து வைப்பு: உயர் நீதிமன்றம்

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை கோரிய வழக்கு முடித்து வைப்பு: உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை கோரிய வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தமிழக சுகாதாரத்துறை சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கிராமத்தில் சுகாதார நல்வாழ்வு முகாம் நடைபெற்றது. அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் சென்று விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த இருசக்கர வாகனப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் ஹெல்மெட் அணியவில்லை.

இதனால், உயர் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது. இது தெரிந்தும், இலுப்பூர் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மோட்டார் வாகனச் சட்டத்தை மீறும் வகையில் உரிய உரிமம் இன்றியும், ஹெல்மெட் அணியாமலும் இருசக்கர வாகனத்தை ஓட்டியது குற்றம். சட்டம் அனைவருக்கும் சமம் என்ற வகையில் அமைச்சரின் செயலும் குற்றமாகும். இது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

னவே, பொதுமக்களின் நலன் கருதி சட்டவிரோத விதிமீறலில் ஈடுபட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, ஹெல்மெட் அணியாமல் சென்றதற்கு பொறுப்பேற்கும் விதமாக பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பில் "விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு சென்றபோது அவசரத்தில் ஹெட்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி விட்டதாகவும், இனிமேல் இது போல நடக்காது எனவும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதையேற்ற நீதிபதிகள் இனிமேல் இது போல நடக்காது என நம்புவதாகத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in