கல்வியாளர்களைக் காப்பதுதான் அரசின் கடமை: ஆசிரியர்கள் போராட்டம் குறித்து கமல் கருத்து

கல்வியாளர்களைக் காப்பதுதான் அரசின் கடமை: ஆசிரியர்கள் போராட்டம் குறித்து கமல் கருத்து
Updated on
1 min read

கல்வியாளர்களைக் காப்பதுதான் அரசின் கடமை என்றும் கல்வியைக் காப்பது கல்வியாளர்களின் கடமை என்றும் ஒருவாரமாகத் தொடரும் ஆசிரியர்கள் போராட்டம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது, 7-வது ஊதியக் கமிஷன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு நிலுவையில் உள்ள 21 மாத சம்பள பாக்கியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த ஒருவார காலமாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை இறுதிக்கெடு விதித்தது.

அவ்வாறு பணிக்குத் திரும்பும் ஆசிரியர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது எனவும், அதற்குப் பின்னரும் பணிக்குத் திரும்பாத ஆசிரியர்களின் பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டு தற்காலிக ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்தது.

இந்நிலையில், இன்று 90%-க்கும் மேலான ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பியதாக பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்தது. எனினும், சில ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டு பள்ளிகளுக்கு வராத தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 225 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், ''கல்வியாளர்களைக் காப்பது அரசின் கடமை. கல்வியைக் காப்பது கல்வியாளர்களின் கடமை. அரசு கடமை தவறினாலும் ஆசிரியர் கடமை தவறலாகாது. தேர்வு நெருங்கும் வேளையில் நாளைய நம்பிக்கையாம் மாணவர்களின் கல்வியை காப்பது நமது கடமை.

பேச்சு வார்த்தைகள் உரிமைக்காய் தொடருட்டும். கல்விச்சாலைகள் கடமைக்காய் திறக்கட்டும். எட்டு கோடித் தமிழர்களின் உணர்வுகளின் சார்பாய் இதுவே என் குரல்'' என்று பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in